திருச்சி: திருச்சியில் ஹிந்துக்களின் புனிதத் தலமாகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்தில் இன்று ஒரு நபர் கருவறை அருகே சென்று, கையில் மறைத்து வைத்திருந்த காலணியை எடுத்து கருவறைக்குள் வீசியுள்ள தகவல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கோயில் கருவறை அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக நின்றிருந்த போது, கூடவே ஒரு குழுவும் நின்றதாகவும், அந்த கும்பலில் வந்த ஒருநபர் கருவறை அருகே வந்தபோது, கையில் மறைத்து வைத்திருந்த காலணியை எடுத்து உள்ளே வீசியதாகவும் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உடனடியாக அந்த நபர் பாதுகாவலர்களால் பிடிக்கப் பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். அந்த நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்றும், காதல் தோல்வி மற்றும் திருமணம் ஆகாத விரக்தியில் மன அழுத்தத்தில் இருந்ததால் அவ்வாறு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அதன் காரணத்தால் இருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
திருவிடை மருதூரில் தம் தந்தை கொத்தனார் வேலை செய்து வருவதாகவும், வீட்டு முகவரியையும் கொடுத்துள்ளார். இதை அடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு முகவரி குறித்து விசாரித்து, தகவலை சரிபார்க்க ஏற்பாடு செய்து வருகின்றனராம்.
இதனிடையே, கையில் கத்தியை வைத்திருந்து, ஆலய அர்ச்சகரை அவர் மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கோயில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. அந்த நபர் குறித்து திருவரங்கம் போலீஸாரிடம் தகவல் கேட்டபோது, குறிப்பிட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இந்தச் சம்பவத்தின் பின்னே எந்த இயக்கங்களும் இல்லை என்றும் கூறினர்.
ஆனால் தஞ்சை, குடந்தை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பு, நெடுங் காலமாகவே, அவ்வப்போது மே மாதங்களில் ஸ்ரீரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் என்ற பெயரில் ஏதாவது போராட்டங்களை நடத்தி வருகிறது என்றும், இது போல் அவர்கள் போராட்டம் நடத்தியதும் போலீஸார் அவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விட்டு விடுவதாகவும் புகார் கூறுகின்றனர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த மே 6,7 தேதிகளிலும் இது போல் கருவறை நுழைவுப் போராட்டம் என்று மகஇக., அமைப்பைச் சேர்ந்த சிலர் முயன்றுள்ளனர். .இது குறித்த போராட்டமும் அவர்கள் அறிவித்திருந்தனர் என்று கூறும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், தாம் இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே இதுபோன்ற மிரட்டல்களையும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் அந்த அமைப்பினர் குறித்தும் பார்த்து வருகிறேன் என்றார்.
இந்நிலையில், திராவிடர் கழகத்தின் கொள்கைகளுடன் இயங்கி வரும் இது போன்ற அமைப்புகளின் செயல்களால் சமூக அமைதி கெடுகிறது என்றும், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் புண்படுவதை போலீஸாரும் மூடி மறைத்து, இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சைக்கோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி, பதட்டத்தைத் தணிப்பதாகக் கருதிக் கொண்டு ஆன்மிக உணர்வுகளை இழிவு படுத்துகின்றனர் என்றும் புகார் கூறுகின்றனர் ஸ்ரீரங்கம் மக்கள்.
இந்தச் சம்பவத்திலும் மகஇக., போன்ற அமைப்புகளே ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தும் அவர்கள், போலீஸார் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.





Unless the D>K> leaders are put behind bars on charges of causing unrest and Religious dishormony, this position will continue. Police in TN will take their side only.