புது தில்லி:நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் சேதுமாதவன் – பல்தேவ் சர்மா நேஷனல் புக் டிரஸ்டின் தலைவர் மாற்றப் பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஏ.சேதுமாதவன் மாற்றப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் சுருக்கப்பட்டு, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இதழான பாஞ்சசன்யவின் முன்னாள் ஆசிரியர் பல்தேவ் சர்மா நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து என்.பி.டி., (நேஷனல் புக் டிரஸ்ட்) அதிகாரி ஒருவர் கூறியபோது, என்.பி.டியின் தலைவராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ இந்தி இதழான பாஞ்சசன்ய இதழின் ஆசிரியராக இருந்த பல்தேவ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேது என்று அழைக்கப்பட்ட சேதுமாதவன், வரும் செப்டம்பரில்தான் பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், அவரது பதவிக் காலம் முடியும் முன்னே, சென்ற மாதம் அவரை அழைத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, அவரை மாற்றம் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து சேது மாதவன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தபோது, “அந்த நிகழ்வானது எனது பணிவிலகலை சமர்ப்பிப்பதற்கு போதுமானது. எனவே நான் உடனே என் விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டேன். இன்று என் விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, புதிதாக ஒருவர் தலைவர் பொறுப்புக்கு அமர்த்தப் பட்டுள்ளார்” என்று கூறினார். இதனிடையே, பழைய நபர்கள் மாற்றப்பட்டு, குறிப்பிட்ட இடங்கள் காவி மயமாக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.