kadeswara subramaniam hindu munnani - 2026

தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

அரசியல் சற்றுமுன் சென்னை தமிழகம்
kadeswara subramaniam hindu munnani - 2026

இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தால் தெய்வத்திருமேனிகள் திருட்டு தொடர்வதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், பெருக்கரணை கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடுபழனி மரகத தண்டாயுதபாணி ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள முருகன் சிலையானது சுமார் 2.5 அடி உயரம் கொண்டது. பல கோடி மதிப்பு கொண்ட முருகன் திருமேனி ஸ்ரீ எல்லப்ப சுவாமி எனும் சித்தரால் 1955 ஆம் ஆண்டு குன்றின் மீது நிறுவப்பட்டது. அதன் பிறகு ஸ்ரீ முத்துசுவாமி சித்தரால் கோவில் கட்டுமானம் செய்யப்பட்டு பெரிய ஆலயமாக எழுப்பப்பட்டது.

அன்று முதல் மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு செவ்வாய் தோறும் சஷ்டி, கிருத்திகை மற்றும் விசேஷ விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருநாளில் கோவிலுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, பறவை காவடி என பல வகையான காவடிகள் எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பாகும். கார்த்திகை தீபம் அன்று குன்றின் மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசிப்பதும், ஆடி கிருத்திகை தினத்திலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆடி கிருத்திகை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக சென்று முருகப்பெருமானை தரிசித்து வருவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பல கோடி மதிப்பிலான தெய்வத்தினியை திருடி சென்றுள்ளனர். காலையில் கோயில் அர்ச்சகர் கோயிலை திறந்த போது சிலை திருடப்பட்டது தெரியவந்தது, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்களது விசாரணை அறிக்கையில் மரகத முருகன் சிலை வெறும் 3 லட்சம் செலவில் தான் 2008 ஆம் வருடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என விசாரணை துவங்குவதற்கு முன் பொதுமக்கள் தெரிவித்ததாக அவசரக் கதியில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இது வேண்டுமென்று கோவில் சிலை திருட்டின் முக்கியத்துவத்தை குறைப்பதாக உள்ளது. கோயிலின் சிலை நிபுணர்களை கலந்தாலோசிக்காமல் பதட்டத்தை குறைக்கும் விதத்தில் சிலையின் மதிப்பு பற்றி செய்தி வெளியிட்டதைக் கண்டிக்கிறோம்.

தொடர்ந்து தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் திருடு போயுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூரில் கோயிலில் உள்ள மரகதலிங்கம் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை.

இதேபோல் திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் பிராணநந்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில் மரகதலிங்கம் திருடப்பட்டுள்ளது. இது அப்போதைய சிலை ஆய்வாளர்கள் இந்த மரகதலிங்கம் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ளது தெரிவித்திருந்தார்கள்.

மேலும் திருவாரூர் தியாகராஜர் சாமி கோயில் மற்றும் உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சிலை திருட முயற்சியும் நடைபெற்றதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு சொல்கிறது. தொடர்ந்து தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் மரகதலிங்கங்கள் திருடப்பட்டு வருவது பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் உண்டாக்கி உள்ளது. உடனடியாக காவல்துறை செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை தண்டாயுதபாணி கோயில் உள்ள மரகத முருகர் சிலையை மீட்க தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து சுவாமி திருமேனிகள் திட்டமிட்டு திருடு போவது கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியம் தான் முக்கிய காரணம். பல கோடி மதிப்பிலானதும் மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் தெய்வத்திருமேனியை பாதுகாக்க முழு முயற்சி எடுத்து இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதிலும் ஊழல்களில் ஈடுபடுவதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதற்கு முன் திருக்கோவில் பொருட்கள் திருமேனிகள் முதலானவை கடத்தப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியில் கூட கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் தமிழக அரசு உடனடியாக தமிழக காவல்துறையின் கோயில் சிலை திருட்டு தடுப்பு பிரிவை வலுப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து குற்றவாளிகள் கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.