1002388202 - 2026

இந்திய விமானியின் சாகசத்தால் பயங்கரவாத செயலில் இருந்து காப்பாற்றப்பட்ட இஸ்ரேலியர்கள்!

உலகம் Featured சற்றுமுன்
1002388202 - 2026

நடுவானில் துபாய் விமானத்தில் அதிர்ச்சி! இந்திய விமானி சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நடுவானில் இரு விமானிகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். மோதலின்போது விமானம் சுமார் 14,300 அடி உயரத்தை வேகமாக இழந்தது.

‘7500’ என்ற விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோத தலையீட்டைக் குறிக்கும் அவசரக் குறியீடு அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பியது.

விமானி அறையில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தலையிட்டு தாக்கியவரை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

கேப்டன் மச்சார் சொன்ன வார்த்தைகள்… இன்று 174 உயிர்களை காப்பாற்றிய தருணம்!

ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கேப்டன் ஸ்மித் மச்சாரிடம், “விமானத்தை சீராக தரையிறக்குவதா? அல்லது திட்டமிட்ட நேரத்தில் விமானம் வந்து சேர்வதா? எது ஒரு விமானிக்கு மிகப்பெரிய திருப்தி?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “இரண்டுமே இல்லை. பாதுகாப்பு. விமானம் சரியான நேரத்தில் வந்து சேர்வதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. அதை கவனித்துக் கொள்ளவே மற்றவர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். நான் தரையிறக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக தரையிறக்குவது; அதுதான் முக்கியம். அது சீராகவும் அமைந்துவிட்டால், அதைவிட சிறந்தது எதுவுமில்லை” என்று கூறியிருந்தார்.

அதே பாட்காஸ்டில், “விமானத்தில் ஏதேனும் தவறு நடந்தால், உங்கள் உயிரைக் காப்பாற்றப் போவது யார்? விமானக் குழுவினர்தான் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்” என்றும் ஸ்மித் மச்சார் கூறியிருந்தார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் கூறிய அந்த வார்த்தைகளே இன்று உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஃப்ளைதுபாய் விமானத்தில் தனது துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், கேப்டன் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க முடிந்தவரை போராடினார். இதன் மூலம் பயணிகள் விமானக் கடத்தலைத் தடுக்க முடிந்தது.

174 பயணிகளின் உயிரையும் காப்பாற்றி, விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதையும் அவர் உறுதி செய்தார். ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்மித் மச்சார் சொன்னது, இன்று அவரது செயலால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஹீரோ என பாராட்டிய மோடி!

துபாய்-டெல் அவிவ் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தாக்குதலின்போது துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை ஹீரோ என குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

“கடுமையான ஆபத்து மற்றும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் செயல்பட்டார். அவரது துணிச்சல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், பெரும் விபத்தைத் தவிர்க்கவும் உதவியது. இந்தியா கேப்டன் மச்சாரை நினைத்து பெருமை கொள்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், கேப்டன் மச்சார் விரைவில் குணமடைந்து, நல்ல உடல்நலத்துடன் மீண்டு வர பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஹீரோ என பாராட்டிய நெதன்யாகு! 174 பேரின் உயிரைக் காப்பாற்றியதாக புகழாரம்

1002388203 - 2026

துபாய்-டெல் அவிவ் விமானத்தில் நடுவானில் தாக்குதலுக்கு உள்ளான இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த நிலையிலும் தாக்குதலை எதிர்த்து போராடிய ஸ்மித் மச்சார், விமானி அறையின் கதவைத் திறந்து, பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தாக்கியவரை கட்டுப்படுத்த உதவியதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதன்மூலம் நடுவானில் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் மச்சார் உண்மையான ஹீரோ என்றும், அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.