சென்னை வயசானவங்க டீமா? தோனி என்ன சொன்னார் தெரியுமா?

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

10 May28 01 - 2026

ஐபிஎல் சீசன் 11 இல், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதிப் போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை அணி. இதன் மூலம் 11வது ஐபிஎல் சீசன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைக்குப் பின் களம் இறங்கியதால், ரசிகர்களிடம் சென்னை அணிமீது உச்ச பட்ச எதிர்பார்ப்பு  இருந்தது. சென்னை அணி, சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைத்தது. இத்தனைக்கும் சென்னை அணியில் லோக்கல் வீரர்கள் எவரும் இல்லை. அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் மற்ற அணிகளுக்கு ஏலம் போனார்கள்.

சென்னை அணியில்,  இந்த  முறை புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் 30 வயதைக் கடந்தவர்கள். இதனால், ‘வயதானவர்கள் அணி’, ‘அங்கிள்ஸ் அணி’ என்று பலரும் கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். ஆனால் அத்தனையையும் கடந்து அசால்ட்டாக கோப்பையை வென்றிருக்கிறது அந்த அங்கிள்ஸ் அணி.

சாம்பியன் கோப்பையைப் பெறும் போது, கேப்டன் தோனியிடம் “சென்னை அணியில் 9 வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “நாம் வயது பற்றியே அதிகம் பேசுகிறோம். அதைவிட முக்கியம்  ஃபிட்னஸ்தான். அவ்வாறுதான் வீரர்களை அணுக வேண்டும். ராயுடுவுக்கு வயது 33. ஆனால் அதனால் எந்த சிக்கலும் இல்லை. அவரால் சிறப்பாக ஃபீல்டிங் செய்யமுடியும். எனவே, வயதைவிட ஃபிட்னஸ்தான் முக்கியம். களத்தில் சிறப்பாகச் செயல்படும் வீரரையே  கேப்டன்கள் விரும்புவர். எனவே, ஒரு வீரர் எந்த வருடம் பிறந்தார், அவருக்கு 19 வயதா, 20 வயதா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. களத்தில் துடிப்பாகச் செயல்பட முடியும் என்றால் அதுவே அணிக்கு முக்கியம்.

வயதானவர்கள் மூத்த வீரர்கள் என்று யோசிக்கும் போது, இதனால் கூட எங்கள் அணிக்கு இருக்கும் சிக்கல்களை நாங்கள் உணர்ந்தே இருந்தோம். குறிப்பாக பீல்டிங் செய்யும் போது, ஏற்படும் காயம்.  வாட்சன் போன்ற மூத்த வீரர்கள் ஃபீல்டிங் செய்யும்போது ஒரு ரன்னைத் தடுப்பதற்காக டைவ் அடிக்க வேண்டியிருந்தால் அது தேவையற்றது என்று சொல்லி, அவ்வாறு செய்வதைத் தவிர்க்கச் சொல்லிவிடுவோம். பிராவோ, வாட்சன் போன்ற முக்கியமான பேட்ஸ்மேன்கள் காயம் பட்டால் அதன் பின்னர் அவர்களுக்கு மாற்று இணையை உருவாக்குவது கடினம். எனவே வயது என்பது, வெறும் ஒரு எண் மட்டுமே. நாம் உடல் உறுதியுடன் இருக்க வேண்டியதுதான் அத்தியாவசியமானது என்று கூறினார் தோனி.

வயதானவர்கள், அனுபவசாலிகள் என்பதால்தான் துடிப்பு மிக்க விளையாட்டாக இருந்தால் கூட, உடல் உறுதியுடன் வெளிக்காட்டி, சென்னை அணியின் பேட்ஸ்மென்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.