கலர் கலரா கலக்கலா… என்றும் 16 மார்கண்டேயன்! துரை.முருகனை கேலி செய்த ஓபிஎஸ்.,!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

duraimurugan ops - 2026

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டலடிக்க, சபையில் சிரிப்பலை எழுந்தது. சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதத்தின் போதுதான் இந்த சுவாரஸ்யம் நிலவியது.

அப்போது, துரைமுருகன் இன்று கலர்புல்லாக உள்ளார்.. உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியதால் சட்டப் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க., ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., பேசும்போது, கோவை வடக்கு தாலுகாவை இரண்டாக பிரித்து, துடியலுாரை புதிய தாலுகாவாக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் உதயகுமார், நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், புதிய தாலுகா அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று பதிலளித்தார்.

அதற்கு ஆறுக்குட்டி, கோவை வடக்கு தாலுகா, அதிக மக்கள் தொகை உடைய பகுதி. எனவே, தாலுகாவை பிரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், கோவை புறநகர் பகுதி, வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை வடக்கு தாலுகா அலுவலகம், நகருக்குள் உள்ளது; மக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனினும், நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், தாலுகாவை பிரிப்பது சிரமமாக உள்ளது. இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கே.வி.குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன், தனது தொகுதியை புதிய வட்டமாக மாற்ற வேண்டும் என வருவாய்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அமைச்சர் உதயகுமார், ஏற்கெனவே அம்மாவின் அரசு 72 வட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய துரை முருகன், 73வது வட்டத்தை அம்மாவின் அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இதனையடுத்து, அம்மா அரசு என கூறியதற்கு துரை முருகனுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்தார்.

பின்னர் பேசிய துரை முருகன், அமைச்சர் கூறியதையே கூறினேன்; புதிய வட்டத்தை உருவாக்கினால், எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்று கூறியவுடன் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதற்கிடையில், உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. இன்று துரைமுருகன் கலர்புல்லாக உள்ளார். என்றும் 16 ஆக அவர் உள்ளார். உங்கள் இளமையின் ரகசியம் என்ன என ஓபிஎஸ் துரை முருகனிடம் கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ்-சின் பேச்சால் அவையில் நீண்ட சிரிப்பலை நிலவியது.

நேற்று வழக்கமான வெள்ளை சட்டை அணிந்து வராமல் துரை முருகன், பிங்க் நிற சட்டை அணிந்து சபைக்கு வந்திருந்தார். அதனால் எழுந்த சுவாரஸ்யங்கள் இவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.