வலிகளினூடே வாழ்க்கையை வென்ற வீரமங்கைக்கு ஒரு சல்யூட்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

gold medal asian games - 2026

100 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் குண்டு எறிதல், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800மீ ஓட்டம் – இவை அனைத்தும் சேர்ந்ததே ஹெப்டத்லான். அமெச்சூர் ட்ரையத்லான்களில் கலந்து கொண்டவன் என்ற வகையில் இந்த ஒவ்வொரு விளையாட்டும் எத்தனை உழைப்பை வாங்கும் என்று ஓரளவு தெரியும். பயிற்சியைத் தவிர எந்த வேலையும் செய்ய முடியாது.

ஆனால் இந்த சவால்கள் ஒருபுறம் களத்தில் காத்திருக்க, சாதாரண காலணிகளுக்குப் பொருந்தாத கால் விரல்கள், பல ஆண்டுகள் கடுமையான தொடர்ந்த முதுகு வலி, அதற்காக ஆசிய விளையாட்டுக்குப் பிறகு காத்திருக்கும் அறுவை சிகிச்சை,
ரிக்‌ஷா இழுத்த தந்தை இரண்டு ஸ்ட்ரோக்குகள் வந்து இப்போது படுத்த படுக்கையில், தேயிலை பறிக்கும் அன்னை – அதனால் விளையாட்டிற்காக பெரிய செலவுகள் செய்ய முடியாத ஏழ்மை என்று களத்துக்கு வெளியே 21 வயது ஸ்வப்னாவுக்கு சவால்கள் நிறைந்திருந்தன. மேலே கண்ட பட்டியலில் ஒரே ஒரு சோதனை வந்திருந்தாலும் நம்மில் பலர் வாழ்க்கையை வெறுத்திருப்போம்.

இவற்றோடு கடுமையான பல்வலியின் காரணமாக வீங்கிய தாடையுடன்தான் ஆசியப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் ஸ்வப்னா பர்மன். போட்டியிலிருந்து விலகலாம் என்று பல முறை வந்த சிந்தனைகளை முறியடித்து வலிகளை வென்று ஹெப்டத்லானில் இந்தியாவிற்கான முதல் தங்கம் வென்றிருக்கிறார்.

இது வெறும் விளையாட்டல்ல. சாதாரணப் பதக்கமல்ல. இது போன்ற சோதனைகள் வந்துகொண்டுதான் இருக்கும், ஆனால் துவண்டு விடக்கூடாது என்பதற்கான வாழ்க்கைப் பாடம். நம்பிக்கையும் விடாமுயற்சியும் நம்மை எங்குவேண்டுமானாலும் கொண்டு செல்லும் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு. வாழ்த்துகள் வீராங்கனையே. இந்த தேசம் நீ தந்த பாடத்துக்குக் கடமைப்பட்டுள்ளது.

அடையாளம் கண்டு ஸ்பான்சர் செய்த ராகுல் டிராவிட் அவரது முதுகு வலிக்கு சச்சின் டெண்டுல்கருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரை அணுகச் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு பெரிய சல்யூட்.

– ஷான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.