பொதுவாக, நெடுஞ்சாலையில் அவசர வாகனங்கள் செல்ல தனி வழி அமைக்கப்படுவது இயல்பு. ஆனால் சுங்கச் சாவடிகளிலாவது அவசர வாகனங்கள் செல்ல தனி வழி அமைத்து, அதில் விஐபி.,க்களை அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சுங்கச் சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கச் சவாடிகளில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சென்று, நிலுவையில் இருக்கும் சுங்கக் கட்டணத்தைச் செலுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுங்கச் சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் செல்வதற்கான உரிய வழி இல்லை என்றும், வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தும், ஓட்டுநரிடம் அடையாள அட்டை கேட்பதும், அப்படியே காட்டினாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சுங்கச் சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில், நீதிபதிகள் மற்றும் விஐபி.,க்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




