என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், நான் திமுக.,வின் தலைவராக ஸ்டாலினை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முன்னதாக, அக்கட்சியின் தலைவராக இருந்த மு.கருணாநிதி மருத்துவமனையில் இறுதியாக அனுமதிக்கப் பட்ட நாளில் இருந்தே, அழகிரி, ஸ்டாலின் விவகாரம் குடும்பத்தில் அதிகமாக பேசப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் சிலரின் முயற்சியால், அழகிரி மீண்டும் திமுக.,வில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
தொடர்ந்து கருணாநிதி மறைந்த நாளில் இருந்து அழகிரி மீண்டும் தனித்து விடப் பட்டார். ஆனால், தன் தந்தையிடம் நியாயம் கேட்கப் போவதாக அறிவித்தார். இதை அடுத்து வரும் செப்,5ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்வதாகக் கூறியிருந்தார். இதனிடையே அவரது ஆதரவாளர்கள் கலைஞர் திமுக., என்ற கட்சி குறித்து, அழகிரியின் பெயரில் போஸ்டாராக மதுரை நகர் உள்பட பல இடங்களிலும் ஒட்டியிருந்தனர். இதனால் அழகிரி தனிக்கட்சி துவங்குவார் என்று கூறப்பட்டது.
ஆனால், அதை மறுத்த அழகிரி, என் இலக்கு திமுக.,தான் என்றார். தொடர்ந்து திமுக.,வில் ஏன் என்னை இணைத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது குறித்து சில காரணங்களைச் சொன்னார்.
இந்நிலையில் மீண்டும் இறுதி வாய்ப்பாக, தன்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார். இதன் மூலம், தனது தனிக்கட்சி கருத்து இரண்டாம் பட்சம்தான் என்று தெளிவாக்கியிருக்கிறார். அது நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதில் தடை ஏதும் இருக்காது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.




