ஜீவனாம்ச பணத்தை வீசிச் சென்ற நபரால் சாலையில் பரபரப்பு

சற்றுமுன்

சென்னை:

சென்னை பெரம்பூரை சேர்ந்த ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே இருந்த காதல் கசந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனைவியிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் மனைவிக்கு வழங்கவேண்டும் என்று கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் அவ்வாறு பணம் கொடுக்கவில்லை.

இதுகுறித்து அந்தப் பெண்மணி ஒரு மனுவை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜரான கணவரிடம் ஜீவானாம்சம் தொகை ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை மனைவிக்கு வழங்கவேண்டும். அல்லது சிறையில் அடைக்க உத்தரவிடப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை செய்தார். இதையடுத்து முதல் தவணையாக ரூ.60 ஆயிரத்தை வழங்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, நீதிமன்ற அறைக்கு வெளியில் வந்த அந்த நபர், ஜீவனாம்சம் தொகை ரூ.60 ஆயிரத்தை மனைவியின் கையில் கொடுக்காமல், அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு, ‘எடுத்துக் கொள்’ என்று கூறி சென்றுவிட்டார்.

குப்பை தொட்டியில் ரூபாய் நோட்டுக்களை போட்டுச் சென்றதை அங்குள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதேநேரம் கூட்டமும் கூடியது. பின்னர், அங்கிருந்த சிலர் அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.