கமல் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும்! இழுக்கிறார் கே.எஸ்.அழகிரி!

சற்றுமுன் சென்னை
KSAlagiri - 2026

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணியாகவோ, தனித்தோ போட்டியிட கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சில கட்சிகளில் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், தமிழகத்தில் இரு பெரும் கூட்டணிகள் அமைவதற்கான வாய்ப்பு மட்டும் பிரகாசமாகத் தெரிகிறது. .

தமிழகத்தில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளிடையே கூட்டணி இறுதியாகியுள்ளது. காரணம், காங்கிரஸைக் காட்டிலும், இந்தக் கூட்டணி அமைவதற்காக மிகவும் சிரமப்பட்டதும் ஆர்வம் காட்டியதும், திமுக.,வே!

என்னதான் விடுதலைப் புலிகளைக் கொன்றவர்கள், இலங்கைத் தமிழர்களை சாகடித்தவர்கள், என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னர் கூறியிருந்தாலும், அதிகாரத்துக்கு ஆசைப்படுவது என்று வந்துவிட்டால் அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை உறுதி செய்வது போல், திமுக.,வே இந்தக் கூட்டணிக்காக அலையோ அலை என்று அலைந்தது. தில்லி வரை படையெடுத்தார்கள். கருணாநிதி சிலைத் திறப்பு என்ற காரணம் காட்டி, ராகுலை சென்னைக்கு அழைத்து வந்து, பிரதமர் வேட்பாளர் இவரே என்று அறிவிக்கவும் செய்தார் ஸ்டாலின்.

எனவே, காங்கிரஸின் பிடிக்குள் திமுக., சிக்கியிருப்பது மட்டும் உறுதி. அது, காங்கிரஸ் கேட்கும் தொகுதியிலும் எதிரொலிக்குமா என்பது கூட்டணிப் பேச்சை நடத்தும் காங்கிரஸாரின் பொறுப்பு என்கிறார்கள்.

அதுபோல், அதிமுக., தரப்பு கூட்டணியில், பாஜக.,வின் விருப்பத்தால் இந்தக் கூட்டணி அமைகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்டு வருகிறது.

கூட்டணிக்காக யோசித்துப் பார்த்த கமல்ஹாசன் வேறு வழியின்றி ஏதோ காரணங்களைக் கூறி, மக்கள் நீதி மய்யம் மட்டும் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்து விட்டார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, நாட்டின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. எங்கள் கரத்தை வலுப்படுத்த கமல் முன்வர வேண்டும்! திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் என்று கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.