பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது நக்சலைட் தாக்குதல்; 15 பேர் உயிரிழப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்கப் படும்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

moist attack2 - 2026

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நக்சலைட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப் படும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் உருவான தினம் இன்று கொண்டாடப் பட்டது. இந்த தினத்தை சீர்குலைக்க, கட்சிரோலி மாவட்டத்தின் குர்க்கேடா கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 வாகனங்களை புதன்கிழமை இன்று அதிகாலை 3 மணிக்கு நக்சலைட்டுகள் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதையடுத்து அங்கே போலீசாரும், கமாண்டோ படையினரும் விரைந்தனர். அப்போது கிடைத்த தகவலை அடுத்து, நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர் போலீஸார். இதற்காக குர்க்கேடாவில் இருந்து கோர்சிக்கு கமாண்டோ படை மூன்று வாகனங்களில் விரைந்தது. மலையோர கிராமமான ஜம்பூர்கேடாவைஇரு வாகனங்கள் கடந்த நிலையில் கமாண்டோ வீரர்கள் 15 பேர் பயணித்த மூன்றாவது வாகனமும் அந்த இடத்தைக் கடக்க முயன்றது. அப்போது அங்கே புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்க வைத்தனர். இதில் அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த 15 கமாண்டா வீரர்களும் ஓட்டுநரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் சி-60 கமாண்டோ படையைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கே.பி.ரகுவன்சி 1992ல் அந்த மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகள் 60 பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கமாண்டோக்களுக்கு நிகரான பயிற்சி அளித்து தனி போலீஸ் படையாக உருவாக்கினார்.

பழங்குடி மக்களை மட்டுமே கொண்ட இந்தப் படையில் 60 பேர் உருவாக்கப் பட்டதால், இது சி-60 கமாண்டோ படை எனப் பட்டது. ஆந்திரா, தெலங்கானா பகுதியில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு வந்து, அங்குள்ள பழங்குடி மக்களை மூளைச் சலைவை செய்து நக்சலைட்டுகளாக மாற்றும் இயக்கத்துக்கு எதிராக பழங்குடிகளைக் கொண்டே அமைக்கப் பட்ட கமாண்டோ படை இது.

இந்தப் படை உள்ளூர் இன இளைஞர்களைக் கொண்டே உருவாக்கப் பட்டதால், இதற்கு கிராம மக்களும் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். மேலும், இந்தப் படையினரும் பழங்குடி இனத்தவர் என்பதால், கமாண்டோக்களுக்கு எதிராக நக்சலைட்கள் தாக்குதல் நடத்த மிகவும் யோசித்தனர். மேலும், கமாண்டோக்களின் வலிமையைக் கண்டு, உள்ளூர் இளைஞர்கள் பெருமளவில் இதில் இணைந்தனர். இதனால் இப்போது 24 படை அணிகளைக் கொண்டதாக சி-60 கமாண்டோ படை உள்ளது.

இந்தப் படை, கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி மகாராஷ்டிரம் கசான்சூர் கிராமத்தில், நக்சலைட் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடப் போவதை முன் கூட்டியே அறிந்து தாக்குதல் நடத்தி 40 பேரைக் கொன்றது. அந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்துள்ள ஒருவாரத்தில், நக்சலைட்கள் இந்தக் கமாண்டோ படையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது.

நக்சலைட்களின் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது; தாக்குதலுக்கு காரணமானவர்கள் தப்ப முடியாது என்று எச்சரித்துள்ளார்.

அதேபோல், மாவோயிஸ்ட்களுக்கு உரிய பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக மாநில போலீஸ் டிஜிபி சுபோத் ஜெயிஸ்வால் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், வீரர்களைக் குறி வைத்து மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வீரர்களின் பின்னால், மாநில அரசின் முழு இயந்திரமும் உள்ளது. மாவோயிஸ்ட்களுக்கு உரிய பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். அந்தப் பகுதியில் மேலும் தாக்குதல் நடக்காமல் இருக்க தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். விரைவில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று டிஜிபி சுபோத் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.