கர்நாடக சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவிட முடியாது!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

supreme court of india - 2026

15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நியாயமான கால வரையறைக்குள் ராஜினாமா விவகாரம் பற்றி சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம்,  சபாநாயகருக்கு முடிவெடுக்க கால வரையறை விதிக்க முடியாது என்றும் அது கூறிவிட்டது.

ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தங்களின் ராஜினாமா மீது சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா மீது சபாநாயகரே முடிவு எடுக்கலாம். ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு அவகாசம் அளிக்க வேண்டும். ஜூலை 18 நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க எம்எல்ஏ.,க்களுக்கு உத்தரவிட முடியாது. விருப்பப்பட்டால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம் என்று கூறியது.

கர்நாடக சட்டசபையில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குமாரசாமியின் அரசு கவிழுமா அல்லது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் குயுக்தி நடவடிக்கைகளால், காங்கிரஸ் ஆட்சியில் அமர வாய்ப்பு ஏற்படுமா அல்லது பாஜக.,வுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.