கருப்பர் கூட்டமும் காவி கொடி பிடிக்கிறவர்களும் எங்களுக்கு ஒண்ணு தான்! என்று அதிமுக அதிகாரபூர்வ நாளேடு “ நமது அம்மா” இன்று வெளியான இதழில் குறிப்பிட்டிருப்பது, பாஜக.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று பாஜக., மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதிமுக., தனது அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் அனுமதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனிதத்தை நெறிப் படுத்தவே மதங்களன்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.
ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோல் இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.
இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அ.தி.மு.க. அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும்.
அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி.
…. என்று குறிப்பிட்டிருக்கிறது. இது பாஜக.,வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கருப்பர் கூட்டமும் பாஜக.,வும் ஒன்றா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக.,வினர் தற்போது கொந்தளிப்பில் உள்ளனர்.