இப்புத்தகத்தை பற்றி….
தெய்வ வழிபாடு என்பது, மனித நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு ஏதோ ஒரு வகையில் நடைபெற்று வருகிறது. நம் முன்னோர் பல வழிகளில் முயன்று தெய்வ வழிபாட்டு முறையை வகுத்துள்ளனர். அந்த வழிபாடு பயன் தரத்தக்க வகையில் அமைவதற்கு பூஜை முறைகள் சிலவற்றையும் வகுத்துள்ளனர். அத்தகைய வழிபாட்டு முறைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் ஒன்று.
நவக்கிரகங்களில் ஒன்றாகத் திகழும் குரு பகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றா? இல்லை என்றால், அவர்கள் இருவரும் எந்த வகையில் வேறுபடுகின்றனர்? அப்படி வேறுபட்டவர்களானால், குரு பகவானுக்குச் செய்யும் பூஜைகளை ஏன் தட்சிணாமூர்த்திக்கு செய்கின்றனர்? தட்சிணாமூர்த்தி வழிபாடு எப்படிப்பட்டது? அதை எப்படி மேற்கொள்ள வேண்டும்? அந்த வழிபாட்டால் ஏற்படும் பயன் என்ன? _ இவற்றுக்கான விளக்கங்களை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் செங்கோட்டை ஸ்ரீராம்.
தட்சிணாமூர்த்திப் பெருமான் அருள் பாலிக்கும் முக்கியத் திருத்தலங்கள், அவற்றுக்குச் செல்லும் வழி, அந்தத் தலத்தின் சிறப்புகள், தட்சிணாமூர்த்தியை வழிபடும் முறை, மந்திரங்கள், தோத்திரங்கள், பலன் தரக் கூடிய வகையில் அவரை எப்படி பூஜிக்க வேண்டும் _ என்பது போன்ற அரிய தகவல்களும் இதில் நிறைந்துள்ளன.
குரு பரிகாரம் என்று பரிகாரத் திருத்தலம் நோக்கிச் செல்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள வழிகாட்டி. குரு பரிகாரம் செய்யும் முறைகளும் பூஜை மற்றும் பலன்களும் நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
எல்லோருக்கும் பொதுவான வகையில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தி கடவுளையும் வழிபடும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. பூஜை முறைகளுக்கான விளக்கப்படங்களும், தட்சிணாமூர்த்தி வடிவப் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள் நன்றாகப் படித்து, ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் உதவும்.

