தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியை படம் வசூலித்தது. அந்த வகையில் முதல் வாரம் மட்டும் ரூ.51.42 கோடி ரூபாயை படம் வசூலித்தது. படம் வெளியாகி 15 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ ரூ.100 கோடியை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, திரை வர்த்தகர் திரிநாத் அளித்த பேட்டி ஒன்றில், ”தமிழகத்தில் தனுஷின் கரியரில் மிகப் பெரிய வசூல் செய்த படமாக ‘திருச்சிற்றம்பலம்’ உருவெடுத்துள்ளது. ‘கர்ணன்’ வசூலை படம் மிஞ்சிவிட்டது. இப்படம் ரூ.100 கோடி கிளப்பைத் தாண்டி, மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்திருந்தார்.
இடையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் வந்த நிலையிலும், விக்ரமின் ‘கோப்ரா’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையிலும் ‘திருச்சிற்றம்பலம்’ நோக்கி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.