mukilan tirupathi arrest - 2026

தமிழக போலீஸாரின் தீவிர தேடுதலில் சிக்காமல் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த முகிலன் திருப்பதியில் நேற்று இரவு ரயில்வே போலீஸாரால் பிடிக்கப் பட்டார். அவர் பின்னர் காட்பாடி கொண்டு வரப் பட்டு, தமிழக சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை இரவோடு இரவாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இதனிடையே, முகிலனைப் பார்க்க சென்னை நோக்கி வந்த முகிலன் மனைவியின் கார் விபத்தில் சிக்கியது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்த முகிலன் மனைவியின் கார் கள்ளக்குறிச்சி அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் முகிலனின் மனைவி பூங்கொடிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் பூங்கொடிக்கு லேசான காயம்தான் ஏற்பட்டது என்றும், சிறிய அளவிலான சிகிச்சைக்குப் பின்னா் பூங்கொடி வேறொரு காரில் சென்னைக்கு புறப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

mukilan tirupathi - 2026நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகிலனுக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வசம் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை விடுவிக்கக் கோரி அவரின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதால் இது தொடர்பான, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் என நக்ஸல் தொடர்பு போராட்டங்களில் ஈடுபட்டவர் முகிலன்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

இந்நிலையில், முகிலன் குறித்து, அவருடன் போராட்டங்களில் பங்கெடுத்த பெண் ஒருவர், முகிலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்தப் பின்னணியில், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திடீரென காணாமல் போனார் முகிலன். போராட்டங்களில் கலந்து கொண்டதால், அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்றும், அரசு அவரை கடத்தியிருக்கலாம் என்றும், தமிழக அரசே அவர் காணாமல் போனதற்கு பொறுப்பு என்றும் எதிர்க்கட்சிகளும்,  எதிர்க்கட்சி இயக்கங்களும் அரசைக் குற்றம் சுமத்தி, நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப் பட்டது.

இந்நிலையில், முகிலன் தலைமறைவாக இருந்து திருப்பதியில் பிடிபட்டுள்ளார். அதுவும் சந்தேகத்தின் பேரில் ஆந்திர மாநிலத்தில் திருப்பதியில் ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்த போது, திடீரென கூடங்குளம் அணு வுலைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதால், அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவர் குறித்து தீவிரமாக விசாரித்தனர். அதன் பின்னரே அவர் முகிலன் என்று தெரியவந்தது.

தன்னை தமிழக அரசு நீதிமன்றத்தின் கட்டளையால் தேடுகிறது என்று தெரிந்தும், முகிலன் ஏன் தலைமறைவாக இருந்தார்?! கடந்த ஐந்து மாதங்களில் அவர் எங்கே சென்றிருந்தார், ஆந்திர மாநிலத்தில் இயங்கி வரும் நக்ஸல் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தாரா, ஐந்து மாதங்கள் யாரை சந்தித்தார், என்ன செய்தார் என்று தீவிர விசாரணையில் போலீஸார் இறங்கியிருக்கின்றனர். அதே நேரம், முகிலன் தமிழகத்தில் இருந்து சென்று, ஆந்திராவில் பிடிபட்டுள்ளதால், நாட்டில் நக்ஸல் தீவிரவாத இயக்கங்கள் குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

தொடர்புடைய செய்திகள்: 

பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் காணாமல் போன முகிலன் திருப்பதியில் பிடிபட்டார்!

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending