
— ஒசாமா ராவல் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
பொதுவெளியில் ஆழமாக பரவியுள்ள அறிவுசார் நேர்மையின்மையை தில்லி குண்டு வெடிப்பு அம்பலப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்டு கேட்டு அலுத்து போன கருத்துக்களும் செயல்களும் அம்பலம் ஏறின. இந்த தாக்குதல் ‘நாட்டை துண்டாடும்’ நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்று தொடங்கி ‘இந்திய சமுதாயத்தை பிரிப்பதற்காக’ என்பது வரை அறிவித்து, எனவே இந்த விஷயத்தை எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று முடிந்தன. ஆனால் இவையெல்லாம் மையமாக உள்ள உண்மையை தவிர்ப்பதாகவே இருந்தன. தாக்குதலை நடத்தியவர் இதை கருத்தியலின் காரணமாக செய்ததாகவும் தன்னார்வத்துடன் முன் வந்து இதை செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த விஷயத்தை எதிர்கொள்ள பலரும் மறுக்கின்றனர்.
உண்மைகளை மறைக்காமல் சொல்ல வேண்டுமென்றால், இந்த தாக்குதலை நடத்தியவர் உமர் நபி என்ற மருத்துவர். நிரூபிக்கப்பட்ட இந்த உண்மை சம்பவத்தை பற்றி மேலும் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
பொதுவெளியில் நீண்ட காலமாக உலா வரும் ஒரு வசதியான மாயையை இது நொறுக்கி தகர்ப்பதாக இருக்கிறது. கல்வியறிவு, வளர்ச்சி, பொருளாதார உயர்வு, சமூக அந்தஸ்து போன்றவை மத ரீதியிலான குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தை மழுங்கடிக்கும் என்று சொல்லப்பட்டு வந்தன. இந்த விவரிப்பு மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் நடந்துள்ள பெரிய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பலரும் மிகவும் படித்தவர்கள். பிரபல கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள். நவீன வாழ்க்கை போக்குடன் இரண்டற கலந்தவர்கள்.
பயங்கரவாதம் அதாவது பொதுமக்களை கொல்வது, அது எந்த காரணத்திற்காக இருந்தாலும், நிச்சயம் வறுமையினால் வந்தது அல்ல. மத அடையாளத்தின் இயல்பான வளர்ச்சியும் அல்ல. அது மிகவும் சிக்கலானது. அது சிக்கலானது என்று ஒப்புக் கொள்வது தான் தீர்வுக்கான முதல் படியாகும்.
சிக்கலானது என்பதை ஒப்புக் கொள்வது அவசியமாகும் . ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சந்தேகப்படுவது மற்றும் இஸ்லாத்துக்குள் எந்த உள் முரண்பாடும் இல்லை என்று மறுப்பது ஆகிய வழக்கமான தடத்தில் நடை போட்டால் நாம் எதையுமே கற்றுக் கொள்ள முடியாது. கற்றுக் கொள்ளவில்லை என்று பொருளாகும்.
அந்த தாக்குதல் நம்மை நெருடலான கேள்விகளை எதிர்கொள்ள தூண்ட வேண்டும். கல்வி அறிவு பெற்ற தனிநபர்கள் எப்படி தங்கள் சக மனிதர்கள் மீது வன்முறையை பயன்படுத்த துணிகிறார்கள்? ஒரு வெற்றிகரமான மருத்துவர் எப்படி தன்னை ஒரு தற்கொலை குண்டாக மாற்றிக் கொண்டார்? அந்த நிலைக்கு அவர் வர தூண்டியது எது? பயங்கரவாதத்தை நோக்கி ஈர்க்க அடி நீரோட்டமாக இருக்கும் கருத்தியல் , உளவியல் அல்லது அரசியல் சித்தாந்தம் எது ? சமூக அமைப்பா, உளவுத்துறையா, நிர்வாக அமைப்பா எதன் தோல்வியால் இந்த சம்பவம் நடந்தது? இது போன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நாம் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ?
2025 நவம்பர் 10ஆம் தேதி டில்லியில் நடந்த தாக்குதல் பொதுவெளியில் விவாதத்தை கிளப்பியுள்ளது. முஸ்லிம்கள் சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறும் ஹிந்து சமுதாயத்தினர் தாங்கள் சொல்லியது நிரூபிக்கப்பட்டு விட்டதில்லையா என்று நெஞ்சை நிமிர்த்தி கேட்கிறார்கள். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லியபடி முஸ்லிம்கள் தங்கள் மதத்தை பாதுகாக்க முனைகிறார்கள். இடதுசாரிகள் இந்த தற்காப்பு நிலையை கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த சந்தடியில் நேர்மையான சுயபரிசோதனை என்ற விஷயம் முற்றிலும் அடிபட்டு போயுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து நிற்கின்றனர் குடும்பத்தினர். மக்கள் மாண்டுள்ளார்கள். ஆனாலும் விவாதமானது உண்மையை தேடுவதற்கு பதிலாக குற்றச்சாட்டுகளும் மறுப்புகளும் என்ற வலையில் சிக்கிக் கொண்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் யார் என்ற அடையாளம் சம்பவத்தை பற்றி மேலும் கவலையை ஏற்படுத்துகிறது . உமர் நபி வறுமையில் திண்டாடியவரோ, படிப்பறிவு இல்லாத இளைஞனோ இல்லை. அவர் ஒரு மருத்துவர். அவரது விவரங்களை பார்க்கும் போது பொருளாதார வளர்ச்சி, தொழிலில் வெற்றி, சமூக மரியாதை ஆகியவை தனிநபரை பயங்கரவாதத்திலிருந்து விலக்கிவிடும் என்ற வசதியான விவரிப்பு பொய்யாய் போயுள்ளது.
இந்த விவரிப்பு பொய்யானது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான அழிவை ஏற்படுத்திய பயங்கரவாதிகள் – அல்கொய்தா தொடங்கி ஐ எஸ் ஐ எஸ், இந்தியன் முஜாஹிதீன் வரையிலும் – பலரும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். பயங்கரவாதமானது வறுமையின் பிள்ளை அல்ல, அது நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.
அந்த நம்பிக்கை கருத்தியலால், இறையியலால், உளவியலால் அல்லது அரசியலால் வந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் அது வறுமையினாலோ புறக்கணிப்பினாலோ வந்ததல்ல. ஒரு படித்த மருத்துவரை மனித வெடிகுண்டாக மாற்றும் சக்தி இதற்கில்லை.
இது தீவிரமாக , ஆழமாக அலசப்பட வேண்டிய விஷயம். மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான் ? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்த கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது அல்லது வன்முறையை புனிதச் செயலாக கருதுகிறது? இது போன்று சிந்தனைகளுக்கு உரமிட்டு வளர்க்கும் சமூக அல்லது அரசியல் எது ? காவல்துறை, உளவுத்துறை , சமூக சூழல் என எந்த நிறுவனத்தின் தோல்வியால் இந்த செயல் நடந்தேறியது ? இனி எப்போதும் இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க நாம் என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ?
முரண்பாடு மிகவும் தெளிவாக தெரிகிறது. ஒரு முஸ்லிம் அரிய செயலைச் செய்தால் – சலாஹூதீன் அய்யூம் (எகிப்து அரசராக இருந்த வரலாற்று நாயகர்) அல்லது ஜோஹ்ரான் மம்தானி (நியூயார்க் மேயர்) – அவர்களை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதை இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறார்கள். (மகாராஷ்டிரா) குர்லாவில் உள்ள இளைஞர்கள் ஜோஹ்ரானின் வெற்றியை தங்கள் வெற்றியெனக் கூறுகிறார்கள்.
ஆனால் வெளிப்படையாக இஸ்லாத்தின் பெயரில் வன்முறை இழைக்கப்படும் போது அதே முஸ்லிம் சமுதாயம் இது இஸ்லாம் அல்ல என்ற மறுப்புக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது. வெற்றி என்றால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயங்கரவாத செயல் என்றால் தனி நபர். இது தார்மீக முரண்பாடு.
உலகளவில் கள்ளக் கொடி தாக்குதல் (ஒருவர் செய்த செயலுக்கு பழியை வேறொருவர் மீது சுமத்துவது அதாவது முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்துவது ) நடப்பதாக ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட , ஒரு நாட்டின் தலைநகரின் மையப் பகுதியில் கார் வெடிகுண்டு வெடிப்பை வீண்பழி சுமத்தும் சதி செயல் என்று எந்த சான்றும் இல்லாமல் புறம் தள்ள முடியாது. இஸ்லாமிய வெறுப்பு மனநிலை என்று முத்திரை குத்துவது இடதுசாரிகளுக்கு சுகபோதை தருவதாக இருக்கலாம். ஆனால் அவர்களின் வசதியான , கற்பனை வாதத்திற்கு உள்ளாகாமல் இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னால் இருக்கும் கருத்தியலை பற்றி விவாதிக்க வேண்டும்.
சூழ்நிலை அக்டோபர் 7 இல் (இஸ்ரேலில்) நடந்ததை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அங்கும் ‘தற்காப்பு’ என்ற பெயரில் திரள் படுகொலை நியாயப் படுத்தப்பட்டது. இஸ்ரேல் உளவுத்துறையின் தோல்வி என்று பழி சுமத்தியவர்களின் கருத்தியல் சாய்வு வெளிப்படையாக தெரிந்தது.
இந்த நிலையில் ஒரு கேள்வி தானாகவே எழுகிறது. உமர் நபி பொதுமக்களை திரள் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்று அதே அறிவு ஜீவிகளுக்கு முன்னதாக தெரிய வந்தால் அவர்கள் அரசுக்கு அதை சொல்லி எச்சரித்திருப்பார்களா ?அல்லது முஸ்லிம்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் பாருங்கள் என்று கும்பல் கூடி வாதிட்டு கொண்டிருப்பார்களா ?
‘ பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை ‘ என்று வாதிடுவதும் , பயங்கரவாதிகள் குரான், ஹதீஸ் வசனங்களை மேற்கோள் காட்டி தங்கள் செயலை நியாயப்படுத்தும் போது பரிதாபமாக சரிந்து விடுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களை தூண்டிய கருத்தியல் பற்றி கூறி தங்கள் செயலை நியாயப்படுத்தும் போது அது பற்றி வேறு விதமாக விளக்கம் கூற வெளியில் இருக்கும் அந்நிய தரப்புக்கு அதிகாரம் இல்லை.
முஸ்லிம் சமுதாயத்தினர் இதை நேரடியாக எதிர் கொள்ள வேண்டும் . சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுவது இந்துத்துவர்களின் தரப்பை ஏற்பது என்று கருதக்கூடாது. மாறாக தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டுமென இஸ்லாமிய சமுதாயத்துக்குள்ளிருந்து எழும் கோரிக்கையாகும்.
பல முஸ்லிம்கள் வெடிகுண்டு தாக்குதலை கண்டிக்க தயங்குகிறார்கள். அவர்களே இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். தாக்குதல் அப்பாவி மக்கள் மீது மட்டுமல்ல. இவர்கள் எதை உயர்த்தி பிடிக்கிறார்களோ அதே மதத்தின் கௌரவத்தை சிதைக்கும் செயல் இது என்பதை மறந்து விடுகிறார்கள்.
நூபூர் சர்மா இஸ்லாமிய மதத்தை அவமதித்து விட்டார் என்று கூறி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீதிக்கு வந்து போராடினார்கள் என்றால் 13 பேர்கள் இஸ்லாத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டதற்காக அதைவிட பத்து மடங்கு அதிகமான முஸ்லிம்கள் வீதிக்கு வந்து கண்டனம் செய்து இருக்க வேண்டும் . அதற்கு மாறாக தனிப்பட்ட முறையில் படுகொலையை நியாயப்படுத்தியும் பொது வெளியில் அதை தவிர்த்து விட்டும் செல்கிறார்கள். தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ளும் இந்த தார்மீக உணர்வு பிற்போக்குத்தனத்தின் உச்சமாகும்.
இடதுசாரி இகோ சிஸ்டம் வழக்கமான பாணியில் எதிர்வினையாற்றி இருக்கிறது. உளவுத் துறையின் செயலின்மை, ராஜினாமா செய், புலன் விசாரணையை இந்த அளவில் நிறுத்து என்று கூறுகிறார்கள் . இதுபோன்ற கொடூர திரளப்படுகொலையை செய்ய தூண்டிய கருத்தியல் பார்வை எது என்பதை ஆய்வு செய்ய மறுக்கிறார்கள். 13 பேர்கள் மாண்டுள்ளார்கள். ஆனாலும் விவாதம் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இஸ்லாமிய வெறுப்பு என்று திசை திருப்பப்படுகிறது. தில்லி வீதியில் கிடக்கும் 13 சடலங்களின் எடையை விட இந்த வாதத்திற்கு கூடுதல் எடை கொடுக்கப்படுகிறது. அறவுணர்வின் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
முஸ்லிம்கள் இதை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் முன்பு மூன்று வழிகள் உள்ளன. (மார்க்க) அறிஞர்கள் சொல்வதை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்வது. மரபுகளை மறு விளக்கம் செய்வது. நவீன காலத்துக்கு ஒவ்வாத வசனங்களை விலக்கி விடுவது. இதைத்தவிர வேறு எதைச் செய்தாலும் அது பிரச்சினையைத் தவிர்த்து விட்டு சுற்றி வளைத்து செல்வதாகும்.
கடினமான கேள்விகளை எதிர்கொள்ள மறுக்கும் சமுதாயத்தினால் தன் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாத செயல்களை அர்த்தமுள்ள வகையில் எதிர்க்க முடியாது. இந்த நேரத்தில் தார்மீக தெளிவு என்பதுதான் முன்னேற்றத்திற்கான ஒரே வழி.
ஒருபுறம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளி ஆக்குகின்றனர். மறுபக்கம் இஸ்லாமிய சமுதாயத்தில் எந்த விதமான உள் முரண்பாடும் இல்லை என மறுத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்த இரண்டில் நாம் சிக்கிக் கொண்டால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. இது குறைகூறிக் கொண்டிருப்பதற்கான நேரம் அல்ல. சரியான தீர்வுக்கு நேர்மையாக முயல வேண்டும்.
அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக – பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு – சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.
நன்றி : மில்லி கிரானிக்கல்
கட்டுரையாளர் மும்பையை சேர்ந்தவர். உலக விவகாரங்கள், நீதித்துறை , சமுக அடையாளங்கள் பற்றி பிரபல செய்தி ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்




