December 20, 2025, 2:26 PM
27.8 C
Chennai

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ayodhya temple dwajarohan - 2025

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா|
புரீ துவாராவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயகா:||  

இது நம் பண்டைய பாரதத்தின் ஆழ்ந்த நம்பிக்கை. மிகப் பழமையான நூல்களில் குறிப்பிடப்படுவது. அதன்படி, மோட்சத் தலங்களான ஏழு நகரங்களில் முதலாவது அயோத்தி! அயோத்தி என்றாலே யுத்தம் இல்லாதது, அல்லது யுத்தங்களைக் கடந்தது என்று பொருள். அயோத்தி என்றாலே, ராமன், ராமாயணம், இக்ஷ்வாகு வம்சம் இவை நம் நினைவுக்கு வரும். வானுலகில் இருந்து பூமிக்கு எடுத்துவரப்பட்ட புண்ணிய மண் என்று அயோத்திக்கு சிறப்பு உண்டு. ஆனால் அந்த அயோத்திதான் இந்தக் கலியுகத்தில் பெரும் யுத்தங்களையும் சந்தித்தது. இன்று நாம் காணும் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீராமரின் ஆலயம் உருவானதன் பின்னணியில் மிகப் பெரும் போராட்ட வரலாறே புதைந்திருக்கிறது. 

ஸ்ரீராம ஜன்ம பூமியில் சுமார் 500 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது ஆலயம் அமைந்து, கடந்த 2024 ஜன.22ல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின்னும் ஆலயம் தொடர்ந்து திட்டமிடப்பட்ட வகையில் கட்டடப் பணிகள் பூர்த்தியாகி, கடந்த 2025 நவ. 25 அன்று, துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது. இதன் மூலம், ஆலயம் முழுவதும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆக்கிரமிப்பாளர்கள் ஒரே நாளில் வாள் முனையில் பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்று, பலரைத் தங்களின் அடிமைகளாக்கிக் கொண்டனர். ஆனால் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியோர் அதேபோன்ற உயிர்க் கொலை நிகழாவண்ணம் தங்கள் உயிர்களையும் வாழ்க்கையையும் தியாகம் செய்து போராட்டங்கள் பல நடத்தி, இறுதியில் சட்டப் போராட்டத்தின் மூலம் நியாயத்தை மீட்டெடுத்தனர். சத்தியம் ஒரு நாள் உறுதியாக வெல்லும்; ஆனால் அதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பது அயோத்தி விஷயத்திலும் உண்மையானது. 

உலக வரலாற்றிலேயே ஒரு இனம் தனது வழிபாட்டு உரிமையையும் கலாச்சாரத் தொன்மையையும் பாதுகாக்க எப்படிப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொண்டது என்பதற்கான ஒரே உதாரணம் அயோத்தி மட்டுமே! உலகின் மற்ற பண்டைய நாகரிகங்கள் எல்லாம் இத்தகைய காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறை வெறியாட்டத்துக்கு உயிரிழந்து உருக்குலைந்து போய்விட்ட நிலையில், அயோத்தி எனும் அடையாளம் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது என்றால், அதன் காரணம் ‘தியாகம்’ என்பதே! 

இந்தத் தியாகப் போராட்டத்துக்கு நீதி எப்படிக் கிடைத்தது?

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டலாம். அதே நேரம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம்! அவ்வகையில், சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டது உச்ச நீதிமன்றம். 

1528: பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் ராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் மேல் பாபர் மசூதி கட்டப்பட்டது. அப்போது உயிர்த் தியாகம் செய்தோர் எண்ணற்றோர். தொடர்ந்து மன்னர்கள் தலைமையிலும் குழுவாகவும் மீட்புப் போர்கள் தொடர்ந்தன.

1857: முதல் சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்கள் இணைந்து, முகலாய அரசர் பகதூர் ஷா தலைமையில் பொது எதிரியாக ஆங்கிலேயருடன் போராடினர். அப்போது ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட, ராமஜன்ம பூமியை ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்க தீர்மானித்தனர். ஹிந்துக்கள் சார்பில் ராமசந்திரதாஸும் முஸ்லிம்கள் தரப்பில் அமீர் அலியும் சமாதான ஒப்பந்தம் செய்தனர். ஆனால் பிரிவினையை ஏற்படுத்த இருவரையும் கைதுசெய்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 

1885: மசூதி – ராமஜன்ம பூமி இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பக் கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபிர்தாஸ் மனு அளித்தார். மனு தள்ளுபடியானது.

1949: ராமஜன்ம பூமி மைய மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டன.

1950: ராமர் சிலைகளை வழிபட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனு அளித்தார். பரமஹன்ஸ ராமசந்திர தாஸ் அங்கே வழிபாடு நடத்த மனு அளித்தார்.

1959: சர்ச்சை இடத்துக்கு உரிமை கோரி நிர்மோகி அகாரா சார்பில் மனு தாக்கலானது. உ.பி., சன்னி வக்பு வாரியமும் அந்த இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.

1961 டிச.18 : 12 ஆண்டுகளில் நீர்த்துப்போக வேண்டிய வழக்கில், சரியாக ஒரு தினம் முன் சன்னி வக்ப் போர்டு தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. ராம்லல்லா சார்பில் அந்த இடத்துக்கு உரிமை கோரி  தேவகி நந்த அகர்வால் வழக்கு தொடுத்தார்.

1980: பிரயாகையில் கூடிய விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத பொதுக் குழு, அயோத்தி பிரச்சினையைக் கையில் எடுத்தது.

1984: நாடு முழுதும் கவனத்தை ஈர்க்க போரட்டங்கள் நடந்தன. மக்களிடம் கொண்டு செல்ல ராமர் ரத யாத்திரை, ராம ஜோதி யாத்திரை, பாதுகை யாத்திரைகள் நடந்தன.

1986, பிப்.1: சர்ச்சை இடத்தில் வழிபாடு நடத்த உள்ளூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1989, ஆக.14: சர்ச்சை இடத்தில் முன்பு இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாஜக., 89 உறுப்பினர்களுடன் வி.பி.சிங் அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. உ.பி.யில் முலாயம் சிங் யாதவும், பீகாரில் லாலு பிரசாத் யாதவும் முதல்வர் ஆனார்கள். 

அயோத்தியில் ஆலயம் அமையக் கோரி, குஜராத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்தி நோக்கி 12 மாநிலங்கள் வழியாக ரத யாத்திரை மேற்கொண்டார் எல்.கே.அத்வானி. மக்கள் ஆதரவு பெருகியது. அவர் பீகாரின் சமஸ்திபூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அயோத்தி நோக்கிச் சென்ற லட்சக் கணக்கான கரசேவகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. எனினும் கரசேவைக்கு குறித்த நாளில், லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். குறித்த நேரத்தில் சர்ச்சைக் கட்டடத்தின் மேலேறி காவிக் கொடியை நட்டனர். மசூதியின் அடையாளத்துடன் திகழ்ந்த மூன்று கும்பங்கள் சிதைக்கப்பட்டன. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ராம பக்தர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

1992, டிச.6: சர்ச்சை இடத்தில் மீண்டும் கரசேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டிச.2ல் அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் வேண்டுமென்றே தீர்ப்பைத் தள்ளி வைக்க, கோபமுற்ற கரசேவகர்கள் மசூதியை இடித்துத் தள்ளினர். காலை 11 மணிக்குத் தொடங்கிய ஆவேசப் போராட்டத்தில், ஆயுதம் ஏதுமின்றி கட்டடம் நிர்மூலமாக்கப்பட்டது. கரசேவகர்களால் பூஜிக்கப்பட்ட செங்கற்கள் கொண்டு, தற்காலிக கட்டடம் கட்டப்பட்டு, அதில் ராம்லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்டார். அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக., அரசு கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1993, ஏப்.3: சர்ச்சை இடத்தைக் கைப்பற்ற அயோத்யா சட்டம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி உள்பட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.

1994, அக்.24: பரூக்கி தொடர்ந்த வழக்கில், மசூதி இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பானது.

2002, ஏப்: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

2003, மே 13: அஸ்லாம் தொடர்ந்த வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வித மத நடவடிக்கைகளும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2010, செப் 30: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா மூவரும் 2:1 என்ற அளவில் பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

2011, மே 9: அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2017, மார்ச் 21: இவ்வழக்கில் அனைத்துத் தரப்பிலும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் என பரிந்துரைக்கப்பட்டது.

2017, ஆக.7: 1994ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீரப்பை எதிர்த்துத் தாக்கலான மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2018, பிப்.8: அயோத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

2018, ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

2018, செப்.27: மசூதி இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல என ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தது. அக்.29 முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது.

2018, அக்.29: ஜனவரி முதல் வாரத்திலிருந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அந்த அமர்வு விசாரணையை முடிவு செய்யும் என்றது நீதிமன்றம்.

2018, டிச.24: 2019, ஜன.4ல் இருந்து மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

2019, ஜன.4: எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து ஜன.10ல் அறிவிக்கப்படும் என்றது உச்ச நீதிமன்றம்.

2019, ஜன.8: மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அமைத்தது.

2019, ஜன.10: வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக்கொள்வதாக அறிவித்ததால், ஜன.29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

2019, ஜன.25: புதிய அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019, ஜன.29: உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.

2019, பிப்.26: சமரசப் பேச்சுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5ல் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் சமரசக் குழுவாக அமைத்தது.

2019, ஏப்.9: உண்மையான நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நிர்மோகா அஹாரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

2019, மே 9 : சமரசக் குழுவினர் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

2019,மே 10: ஆக.15-க்குள் சமரசப் பேச்சுவார்த்தையை முடிக்க உத்தரவானது.

2019, ஜூலை 11: சமரசப் பேச்சின் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டது.

2019, ஜூலை 18: சமரசப் பேச்சு தொடரலாம்; ஆக.1-ல் அறிக்கை தாக்கல் செய்க என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஆக.1: சமரசக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

2019, ஆக.2: ஆக.6 முதல் தினமும் விசாரணை நடக்கும் என்றது உச்ச நீதிமன்றம். அதன்படி விசாரணை தொடர்ந்தது.

2019, அக். 4: அக்.17க்குள் விசாரணை முடிக்கப்படும். நவ.17க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றது உச்ச நீதிமன்றம்.

2019, நவ. 9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், நிலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும். முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக மசூதி கட்ட உ.பி. அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நெடிய சட்டப் போராட்டத்தின் மூலம், அயோத்தி கோயில் பூமி பூஜை கடந்த 2020 ஆக.5ல் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 2020 மார்ச்சில் கட்டுமானத்தைத் தொடங்கியது. கோவிட் போன்ற தொற்று தடைகள் அகல, விஷ்வ ஹிந்து பரிஷத் ‘விஜய மஹாமந்த்ர ஜப அனுஷ்டானத்துக்கு’ ஏற்பாடு செய்தது. 2024 ஜன.22 அன்று, அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்பகிரகத்தில் ராமர் விக்ரஹப் பிரதிஷ்டை நடக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதன்படி வெகு விமர்சையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்ள, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.   

ஸ்ரீராமபிரானுக்கும் நம் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. இந்த மண்ணில் தான் ஸ்ரீராமன் தன் பாதம் தோய நடந்தான். அதன் பின் இந்த மண்ணில் ராமனுக்காக ஆண்டாண்டு காலமாய் ஆலயங்கள் பல அமைந்தன. சங்க காலப் புலவர்களும் அப்போது மக்கள் மத்தியில் நிலவி வந்த ராம காதையைத் தம் பாடல்களில் பதிவு செய்தனர். பின்னாளில் எழுந்த பக்தி இயக்கத்தில் ஆழ்வார்களால் ராமன் பெரிதும் கொண்டாடப்பட்டான். ராமனுக்காக எழுந்த அறநெறிக் காவியமாக தமிழின் கவிச் சிறப்புடன் கம்பன் ராமாயணம் செய்தான். ராம நாடகக் கீர்த்தனைகள் என அருணாசலக் கவிராயர் பாடல்கள் புனைந்தார். 

இப்படியெல்லாம் ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச நீதிமன்றத்தில் போராடி, வாதாடி வெற்றித் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் அவர். 94 வயதிலும் தள்ளாத நிலையிலும், அவர் வாதாடிய நேரத்தில், “நீங்கள் அமர்ந்தே வாதாடலாம்” என்று நீதிபதி சொன்னபோதும், “இதை என்  ராமனுக்காகச் செய்கிறேன். அதனால் அமர்ந்து வாதிட மாட்டேன்” என்று சொல்லி, பல மணி நேரம் நின்றே வாதாடி வெற்றி பெற்றுத் தந்தார். ஆலயம் அமையவும், ஆலய கட்டுமானப் பணிகளுக்கும் அதிகபட்ச நன்கொடைகளை தமிழகம் அளித்தது. 

ராமர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை அளிக்க வீடுதோறும் சென்ற ஸ்வயம்சேவகர்களுக்கு பல சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். கும்பாபிஷேக அழைப்பிதழைக் கூட ஒவ்வொருவரும் தங்கள் காலணிகளை கழற்றிவிட்டு, பயபக்தியுடன் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். ராமன் ஆலயத்துக்காக தமிழகத்தின் ஏக்கம் எத்தகையது என்பதை அந்த அனுபவக் கதைகள் உணர்த்தின. என்னதான்  திராவிடமும் நாத்திகமும் வேற்று மதத்தினரும் தமிழகத்தில் ராமனுக்கு எதிராகப்  பேசி வந்தாலும், மக்களின் உணர்வுகளில், மரபணுக்களில் ராம பக்தி இருப்பதை அந்நேரம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆலய பிராணப் பிரதிஷ்டை தினத்தில், தங்கள் வீட்டு வாசலில் அலங்கரித்து, கோலமிட்டு, விளக்கேற்றி,, ராம நாமத்தை ஜபித்தார்கள். இவையெல்லாம் அந்த வெற்றிச் சரித்திரத்தின் பலன்களாக இந்தத் தலைமுறையில் நாம் பார்க்கிறோம். அந்த வகையில் நாம் புண்ணியம் செய்தவர்களே! 

– செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

Topics

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

Entertainment News

Popular Categories