
அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.
திரு அத்யயன உற்சவம் : மார்கழி மாதம் 05ம் தேதி இன்று 20-12-2025 முதல் மார்கழி மாதம் 25ம் தேதி 09-01-2026 வரை நடைபெறும்.முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி 30-12-2025 – பரமபத வாசல் திறப்பு காலை 05.30 மணி நடைபெறும்.ஸ்ரீ ஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் மார்கழி மாதம் 24ம் தேதி 08-01-2026 முதல் தை மாதம் 1-ம் தேதி 15-01-2026 வரை நடைபெறும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்திப்பெற்ற பகல்பத்து உற்சவம் வெகு விமர்சையாக இன்று தொடங்கப்பட்டது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சைப் பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிகப் பிரசித்திப்பெற்ற நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்தப்படியாக மார்கழி திருவிழாவின் பகல்பத்து, இராப்பத்து, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும் மிக முக்கிய நிகழ்வுகளாகும்.
இந்நிலையில், மார்கழி உற்சவத்தையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் இன்று தொடங்கப்பட்டது. பகல்பத்து நிகழ்ச்சியின், தொடக்கமாக பச்சைப் பரத்துதல் நிகழ்வு ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.
சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என்றழைக்கப்படும் ஆண்டாளை நந்தவனத்தில் இருந்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் என்பது புராணம். அந்த வழித்தோன்றலில் வந்த பெரியாழ்வாரின் சந்ததியினர் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பகல்பத்து உற்சவம் தொடங்கும் நாளன்று ஆண்டாள், தன்னை எடுத்து வளர்த்த தந்தை பெரியாழ்வாரின் வீட்டுக்கு ரெங்கமன்னாருடன் வருகைத்தந்து சீர் வாங்கிச் செல்வது வழக்கம்.
அவ்வாறு ரெங்கமன்னாருடன், ஆண்டாள் பல்லக்கில் வரும்போது உற்சவர்களின் பார்வைபடும்படி பச்சைக் காய்கறிகளைப் பரப்பி வைத்தால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எப்போதும் பசி, பட்டினியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதிகம்.
இவ்வாறு பரப்பி வைக்கப்படிருக்கும் பச்சை காய்கறிகளை ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் பார்த்தப்பின்பு அதனை பக்தர்கள் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் தங்களின் வீடுகளிலும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மார்கழி உற்சவத்தில் ஆண்டாள் கோயிலில் மட்டுமே நடைபெறும் இந்த பச்சைப் பரத்தல் நிகழ்ச்சியைக்காண தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகை தருவார்கள்.
அதன்படி இன்று நடைபெற்ற பச்சைப்பரத்தல் நிகழ்ச்சிக்காகப் பல்வேறு மாவட்டத்திலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஆண்டாள், ரெங்கமன்னரை மனமுருக தரிசித்து வழிபட்டனர். தரிசனத்துக்குப் பின்னர் பச்சைப் பரத்தலுக்காகப் பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை பக்தர்கள் ஆர்வமுடன் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!
பகல்பத்து உற்சவம் இன்று தொடங்கியதையடுத்து ஆண்டாள் கோயிலில் தேதி எண்ணெய்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. பகல்பத்து, இராப்பத்து நிகழ்வாக கொண்டாடப்படும் 20 நாள் உற்சவத்தின் ஒவ்வொரு நாள் விழாவுக்கும் ஆண்டாள் – ரெங்கமன்னர் சாமி சிலைகள் திருக்கோயில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.
30-12-2025 அன்று பரமபத வாசல் திறப்பு காலை 05.30 மணி நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவே இராப்பத்து வைபவமும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது




