December 6, 2024, 10:15 AM
27.2 C
Chennai

இந்திய விடுதலைக்குப் பின் வெளியான முதல் நினைவு நாணயம்!

jawaharlal-nehru-coin
jawaharlal nehru coin

நவம்பர் 14 : ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர். சுதந்திரப் போராட்ட வீரராகவும், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய வர் நேரு.இதன் காரணமாக அவரை, “நவீன இந்தியாவின் சிற்பி” அழைக்கப்பட்டார்.

1889ம் ஆண்டு நவம்பர் 14ந்தேதி, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், பெரிய செல்வந்தரும், வழக்கறிஞ ருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார். நேருவுக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜயலட்சுமி பண்டிட் மற்றொருவர் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள்.

அவரது தொடக்க கல்வி இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தொடங்கியது. அங்குள்ள ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.

இதற்கிடையில், 1916 ல் கமலா கவுல் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
திருமணமான ஒரு வருடத்தில் அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். அவருக்க இந்திராபிரியதர்ஷனி என்று பெயர் சூட்டினார். அவர்தான் பின்னாளில் இந்திரா என்ற இரும்பு பெண்மணியாக திகழ்ந்தார்.

இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’ நாட்டையே உலுக்கியது. அதை அறிந்த நேரு, அதன் பிறகுதான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட தொடக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.

பஞ்சாப் அமிர்தசரஸ் என்ற இடத்தில், ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் கொடூர மான தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்தவும் உந்துதலாக இருந்தது.
அதைத்தொடர்ந்து, அதுவரை மேற்கத்திய உடைகள் அணிந்த வந்த நேரு, பின்னர் காந்தியின்பால் ஈர்ப்புகொண்டு கதர் ஆடைக்கு மாறினார்.

ALSO READ:  கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஏற்பு!

காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த தற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

nehru
nehru

சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கப் பட்டபர். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929 லாகூர் நிகழ்ச்சியைத் தலைமை யேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.

1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமை யேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார்.

ஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947 டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார். ‘சுதந்திர போராட்டம் காரணமாக ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு, அந்த நாட்களில் 1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்” 1936 ல் “சுயசரிதை” “இந்தியாவின் கண்டுபிடிப்பு” நூல்களை எழுதினார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார்.

ALSO READ:  பரிதவிப்பது பாஜக வா? கோவையா?

அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது. 1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார்.

பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார்.

நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.

‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.

இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.

நேரு, பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்து வதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார்.

மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது.

1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது.

ALSO READ:  நடிகர் கிருஷ்ணாவின் 23வது படம்! கிராமத்துக் கதையாம்!

இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியா முழுவதும் , நாட்டின் முதல் பிரதமரைன நேருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஏராளமான கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன

1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது. மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. நேரு , வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.

1964 ம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

விடுதலை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் இறப்புக்குப் பிறகு அவரது தியாகத்தை போற்றும் விதமாக, நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் 1964ஆவது ஆண்டில் வெளியாயின. ஒரு ரூபாய் நாணயத்தில் நேருவின் படத்துடன் “ஜவகர்லால் நேரு” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியானது.

ஐம்பது பைசா நாணயத்தில் நேருவின் படத்துடன், பாதி நாணயங்களில் “ஜவகர்லால் நேரு” என ஆங்கிலத்திலும் மீதி நாணயங்களில் இந்தியிலும் எழுதப்பட்டு வெளியானது. இதுவே இந்தியா விடுதலை பெற்ற பின்னர் வெளியான முதலாவது நினைவு நாணயமாகும்.

  • விஜயகுமார் (யோகா ஆசிரியர், திருச்சி)
author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week