சரம சம்ஸ்காரம் எனும் அபர கர்மா ஏன்?

ஆன்மிகக் கட்டுரைகள் பொது தகவல்கள்

அபர க்ரியைகள் என்று சொல்லப்படுவதை இரண்டு விதமாக ரிஷிகள் நமக்கு வகுத்து அளித்துள்ளனர். ஒன்று பிரம்மமேத ஸம்ஸ்காரம். மற்றொன்று பைத்ருமேதிக ஸம்ஸ்காரம்.

இறந்தவர் வேதாத்யாயனம் செய்தவராக இருந்து கர்மா செய்கிறவருக்கும் வேத மந்திரங்கள் பரிச்சயம் இருக்குமேயாகில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் செய்வது விசேஷம். மற்ற எல்லோருக்கும் பொதுவான பைத்ருமேதிக விதானத்தில் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் என்பது சட்டம்.

இந்த அபர கர்மா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. சுபஸ்வீகாரத்துடன் சேர்த்தால் இது மொத்தம் 13 நாட்களாகும்.

ஸம்ஸ்காரத்தின் மஹிமையும், பலனும் மிகவும் உயர்ந்தது. இவைகளை பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு முறைப்படி செய்வது தாய், தந்தையர்க்கு பிள்ளையாக பிறந்ததற்கு இதைவிட பிரதி உபகாரம் வேறொனறுமில்லை எனக் கூறலாம். 

பித்ருகர்மாவை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

  1. உயிர் பிரிந்த நொடியிலிருந்து 12 நாட்கள் வரை செய்யப்படும் அபர கர்மா, 

  2. பிறகு தொடர்ந்து வருஷம்தோறும் அதே திதியில் செய்யும் சிராத்தம்.

முன்னது பிரேதத்திற்குப் பித்ரு நிலையைத் தருவது.

இரண்டாவது பித்ரு நிலையில் உள்ளவருக்குத் த்ருப்தி அளிப்பது.

முழு ஒத்துழைப்பு

இந்த அபர கர்மாவில் ஜீவநாடியாக இருப்பவைகள் இரண்டு,

  1. மந்திரங்களுடன் சேர்ந்த ப்ரயோகங்கள்

  2. தானங்கள்,

முதலாவதைப் பற்றி கர்மாவை நடத்தும் சாஸ்திரிகள் பார்த்துக் கொள்ளுவார், நாம் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்தால் போதுமானது. ஒத்துழைப்பு என்றால் அவர் சொல்லும் மந்திரத்தை கூடுமான வரையில் ஸ்வரத்துடன் திருப்பிச் சொல்ல முயற்சி செய்வதும், அவர் கூறுகிற நோத்தில் நாம் தயாராக இருந்து இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ச்ரத்தையுடன் ப்ரயோகத்தை அவர் சொல்படி செய்வதும்தான். இரண்டாவதாக தானங்கள். இதன் அளவையும் தன்மையையும் கர்த்தா தான் முடிவு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் தானங்கள் அளவிட முடியாத பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

மனசு வர வேண்டும்

வசதியுள்ளவர்கள் த்ரவியம் (கைக்காசு) செலவழித்தால்தான் கர்மா பூரண பலைத் தரும். இதில் சந்தேகம் வேண்டாம். 

பணத்தை வைத்துக் கொண்டு. அபரகர்மாவிற்கு செலவழிக்க மனசு வரவில்லை என்றால் இது நன்றி கெட்டச் செயலாகும். பிறகு வருத்தப்பட வேண்டிவரும்.

வசதி இல்லாத போதுசரி, பணவசதி இல்லாதவர்கள் என்ன செய்ய? என்ற கேள்வியும் எழலாம். கவலைப்பட வேண்டாம். உங்களாத்து சாஸ்திரிகளை அணுகினால் அதற்குத்தக அவர் செய்து தருவார். சாஸ்திரிகளின் கடமையும்கூட.

பணம் அதிகம் இருந்தால்தான் கர்மா செய்யமுடியும் என்பதில்லை. விரலுக்குத்தக்க வீக்கம்தான் வீங்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் எளிமையாக செய்தால், பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்களே தவிர, எந்த தோஷமம் வராது.

மனோபாவம்:

ஒருவேளை அப்பா, அம்மா உயிருடன் இருக்கும் போது நாம் அப்படி, இப்படி இருந்திருந்தாலும், அவர்கள் மறைந்த பிறகாவது அவர்களுக்காக, அவர்கள் நற்கதியடைய கர்மாவை சரிவர செய்யாவிடின், பின் சந்ததிகள் கஷ்டப்படுவார்கள் என்பது பெரியோர்களின் வாக்கு.

மொத்தத்தில் கர்மா பண்ணுவதும், சரியாக பண்ணாமல் இருப்பதும் அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொருத்தும், மனோபாவத்தைப் பொருத்தும் அமையலாம்.

நம்மால் இயன்ற வரையில் கர்மாக்களை விடாமல் அனுஷ்டிக்க முடிவு செய்தால் நமது குடும்பம் க்ஷேமமாக இருக்கும்.

கட்டுரை : சாஸ்திரிகள்

(”வேதமும் பண்பாடும்” நூலிலிருந்து…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.