வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி: இந்திய அணி செய்த சாதனைகள்!

இந்தியா லைஃப் ஸ்டைல் விளையாட்டு
test won india - 2026

இந்திய மண்ணில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் விராட் கோலி.

வங்கதேச அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளையும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

கடந்த அக்டோபரில் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதன் கடைசி இரண்டு போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தற்போது, வங்கதேசத்திற்கு எதிராகவும் இரண்டு போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து 4 டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற வரலாறு படைத்தது.

இந்திய அணிக்காக டெஸ்ட் அரங்கில், தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி தேடித் தந்த கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி முதலிடம் பிடித்தார்.

கடந்த ஆகஸ்டில் ஆன்டிகுவாவில் நடந்த டெஸ்டில் இவரது தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. இதன்பின் மேற்கு இந்திய தீவுகள் (1), தென் ஆப்ரிக்கா (3), வங்கதேச (2) அணிகளுக்கு எதிராக வென்றது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 7 போட்டிகளில் வெற்றி தேடித்தந்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன், தோனி (பிப்.2013- நவம்பர் 2013) 6 போட்டிகளில் வென்று காட்டியதே அதிகபட்சமாக இருந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-0 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்பின், தொடர்ந்து அசத்திய இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் 12வது டெஸ்ட் தொடரை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி 5வது இடத்திற்கு முன்னேறினார். இவர், 53 போட்டிகளில் 33 வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

சொந்த மண்ணில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்திய டெஸ்ட் போட்டிகள் வரிசையில், கோல்கட்டா போட்டி முதலிடம் பிடித்தது.

இதில் இஷாந்த் (9), உமேஷ் (8), ஷமி (2) என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் மொத்தம் 19 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.