பாவம்… பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க இயலாத நிலையில்… நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
nirmalaseetharaman2 - 2026

2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க இயலாமல், தொண்டை கரகரப்பில் அடைத்துக் கொள்ள, சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

காலை 11 மணி அளவில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள், அறிவிப்புகள், பட்ஜெட் எப்படி யாருக்காக இருக்கும் என்ற பீடிகைகள்… இவை எல்லாவற்றையும் விட, காஷ்மீர் கவிஞரின் கவிதை வரிகள், காளிதாசரின் கவிதைகள், வழக்கம் போல் திருக்குறள், ஔவையாரின் ஆத்திசூடி என அவற்றில் இருந்தெல்லாம் மேற்கோள்கள் என… தொடர்ந்து உரையாற்றினார்.

11 மணிக்குத் தொடங்கி அவர் உரையாற்றிய போது… சற்று உற்சாகமாக இருந்த நிலையில்… இடையிடையே மோடி குறித்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் அவர் பெருமிதமாகச் சொன்ன போது, எதிர்க்கட்சியினர் அவையில் கூச்சல் எழுப்பி, அவரை பேசவிடாமல் இடையூறு செய்தனர்.

அந்த வெற்றுக் கூச்சலுக்கு மத்தியில் -அவற்றையும் மீறி அவர் அதிகம் சத்தமிட்டு பேசினார். இருப்பினும், அவர் பட்ஜெட் உரையைத் தொடங்கி வெகு நேரம் பேசி வந்ததால், தொண்டையில் பிரச்னை ஏற்பட்டது.

மதியம் சுமார் 1.40 மணி அளவில்ம் அவர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கி, சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் ஆன நேரத்தில், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. தண்ணீர் எடுத்து வருமாறு பணியாளர்களைக் கேட்டுக் கொண்டார். தண்ணீர் குடித்த பிறகும் கூட அவரது நாக்கு வறண்டது. வாய் குளறி பேச்சு தடுமாறியது.

தொடர்ந்து அவரால் பட்ஜெட் உரையை அழுத்தம் திருத்தமாக முன்பு போல் உச்சரிக்க இயலாமல் தடுமாறினார். இதனால் அருகே அமர்ந்திருந்த மூத்த அமைச்சரான ராஜ்நாத்சிங், பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசிக்க வேண்டாம், மக்களவையில் உரையை சமர்ப்பித்து விட்டதாகக் கூறி அமர்ந்து விடுங்கள் என்று உடல் நிலையைக் காரணம் காட்டி, வற்புறுத்தினார்.

ஆனால் நிர்மலா சீதாராமனோ முதலில் அதைக் கேட்கவில்லை. பரவாயில்லை… இன்னும் இரண்டு பக்கங்கள் தான் இருக்கிறது. முடித்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு, மறுபடியும் வாசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரால் இயலவில்லை. ஒரு கட்டத்தில் தன்னால் மேலும் இயலாது என்று தனக்குத்தானே உணர்ந்த நிர்மலாசீதாராமன், பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறி நிறைவு செய்துவிட்டு அமர்ந்து விட்டார். எனவே அவர் முழுமையாக பட்ஜெட் உரையை வாசித்து முடிக்கவில்லை.

தொண்டை வறட்சியால் ஏற்பட்ட குரல் தடுமாற்றத்துக்கு முன்னர், அவர் மறைமுக வரி விதிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் ஆசான் என்று கூறப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் அமரர் அருண் ஜேட்லியும் இது போல் உடல் நலக் கோளாறால், அமர்ந்த படியே முன்னர் பட்ஜெட் உரையை வாசித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.