தில்லி மற்றும் உ.பி.,யில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தனிமையில் தங்குவதற்காக, ‘பைவ் ஸ்டார்’ ஓட்டல்களில், அரசு செலவில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தில்லியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ”இங்கே பணியாற்றும் டாக்டர்களை, தனிமையில் தங்க வைப்பதற்காக, லலித் பைவ் ஸ்டார் ஓட்டலில், அரசு செலவில், 100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன,” என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், டாக்டர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதனால், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவர்’ என, கூறப்பட்டுள்ளது.
உ.பி.,யிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை தனிமைப்படுத்தும் வகையில், லக்னோவில் நான்கு சொகுசு ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
லக்னோவில் உள்ள, டாக்டர் ராம் மனோகர் லோகியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் சஞ்சய் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் ஓட்டல்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன