ரயில், விமானப் போக்குவரத்தெல்லாம் மே 15-க்கு பிறகுதான் தொடங்குமாம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kolkatta train - 2026

40 நாட்கள் லாக் டவுன் முடிவடைந்தாலும் மே 15-ஆம் தேதிக்குப் பிறகே நாட்டில் ரயில், விமானப் போக்குவரத்து சேவையெல்லாம் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டிருக்கிறது. இருப்பினும் ஏப்.20 ம் தேதி நாளை முதல் ஊரடங்கில் ஒரு சில துறைகளில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன.

இந்த தளர்வுகள் குறித்து தமிழக அரசின் வல்லுநர் குழு பரிசீலனை செய்து வருகிறது. இக்குழுவின் அறிக்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்டு, அதன் பின்னரே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் எவ்வகையில் எல்லாம் தளர்வுகள் மேற்கொள்ளப் படலாம் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனப் படுகிறது.

மே 3-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தவுடன் விமானப் போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் ஊரடங்கு முடிவடைந்தாலும் ரயில், விமானப் போக்குவரத்தை மே 15-ஆம் தேதிக்கு பின்னரே மத்திய அரசு தொடங்கக் கூடும் என கூறப்படுகிறது.

அதேநேரம் பிற மாநிலங்களில் அவதிப்படும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாகவும் மே 3-ஆம் தேதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களின் குழுக் கூட்டத்தில் ஆலோசித்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மே 15ஆம் தேதிக்குப் பின்னர் வரை ரயில், போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்று பிரதமர் மோடி அவ்வாறே அறிவிப்பு வெளியிடுவார் என்கிறார்கள்.

இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனம் மே 4-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவைகளை இயக்குவதாலும் ஜூன் 1-ஆம் தேதி சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதாலும் முன்பதிவு தொடங்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் மே 4ஆம் தேதி முதல் விமான சேவைகள் இயக்கப்படும் என்றது.

ஆனால் இந்தத் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் முடிவுகளுக்குப் பின்னரே முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.