அதிகரிக்கும் கொரோனா: படுக்கைகள் இன்றி அவதிப் பட நேரும்!

இந்தியா பொது தகவல்கள்
corono 10 - 2026

இந்தியாவில் ஜூலை மாதத் தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 6 லட்சத்திலிருந்து அதிகளவாக 20 லட்சம் வரையிலும் இருக்கும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தவிர, கொரோனா நோய்த் தொற்று பரவிவரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவில் மருத்துவமனைப் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நேரிடும் என அஞ்சப்படுகிறது.

நாட்டில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை – 1,38,845. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,977 பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் நாடு முழுவதும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,021.

மும்பையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதிப்பதிலும் அவர்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துச் சிகிச்சையளிக்கத் தேவையான படுக்கைகள் கிடைப்பதிலும் பிரச்னைகள் வரத் தொடங்கியுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க முயன்று தாமதமானால்தான் தங்களுடைய தாத்தா உயிரிழக்க நேரிட்டது மும்பையைச் சேர்ந்த பரீக் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தந்தை கெஞ்சிக் கேட்டபோதும், சாதாரண படுக்கைகூட இல்லை என்று மருத்துவமனைகள் மறுத்துவிட்டதாகவும் பரீக் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகின் மக்கள்தொகை அதிகமான நாடுகளில் இரண்டாவதான (முதல் நாடு சீனா!) இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 13 நாள்களில் இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்கும் போக்கு குறையவேயில்லை என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத் தொற்று நோயியல் பேராசிரியர் பார்மர் முகர்ஜி.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுப்படவே இல்லை என்று குறிப்பிடும் முகர்ஜி குழுவினர், ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் 6 லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து 20 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் பரீக் குடும்பத்தினர் அவதிப்பட்ட, இந்தியாவின் வணிகத் தலைநகரான, அதிக மக்கள்தொகை கொண்ட நகரான மும்பையில், நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.

ஒருவேளை மிச்சிகன் பல்கலைக்கழகக் கணிப்பின்படி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்தியா திணறிப் போய்விடும் என்பதில் எவ்வித வியப்புமில்லை.

கடந்த ஆண்டின் மத்திய அரசு தகவல்களின்படி இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் 7,14,000 படுக்கைகள் இருக்கின்றன (2009-ல் 5,40,000 படுக்கைகள்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட இது மிகவும் குறைவு.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (ஆர்கனைசேஷன் ஃபார் எகானமிக் கோ ஆபரேஷன் அன்ட் டெவலப்மென்ட்) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 2 ஆயிரம் பேருக்கு ஒரு படுக்கைதான் (ஆயிரத்துக்கு 0.5 படுக்கை) இருக்கிறது. 2009-ல் 2200 பேருக்கு ஒரு படுக்கை.

மாறாக, சீனாவில் ஆயிரம் பேருக்கு 4.3 படுக்கைகளும் அமெரிக்காவில் 2.8 படுக்கைகளும் இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.