லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை: அறிவித்தது நீதிமன்றம்

இந்தியா சற்றுமுன்

பீஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவுக்கு இரண்டாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.

1994 -1996 கால கட்டத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது கால்நடைத் தீவனம் வாங்கியதாக போலியான ரசீதுகள் கொடுத்து, அரசுக் கருவூலத்தில் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. இது தொடர்பான புகாரை ஏற்று சிபிஐ., விசாரணை நடத்தியது.

சிபிஐ., விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த முறைகேடு தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில் ரூ.89.27 லட்சம் எடுத்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கான தண்ட்னை விவரங்களை நீதிபதி இன்று அறிவித்தார். அதன்படி, லாலுவுக்கு சுமார் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், இந்த வழக்கிற்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.