பாட்னா:
சகோதரி இறுதிச் சடங்கில் பங்கேற்க பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பரோலுக்கு விண்ணப்பிக்கிறார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. தனி நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் லாலு பிரசாத்தின் சகோதரி கங்கோத்ரி தேவி (வயது 73) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். லாலு பிரசாத்தை விட 4 வயது மூத்தவரான கங்கோத்ரி தேவியின் மரணம் குறித்து லாலுவின் மனைவி ராப்ரிதேவி கூறும்போது, ‘‘வழக்கில் இருந்து தம்பி விடுதலை ஆகவேண்டும் என்பதற்காக கங்கோத்ரி தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். இருப்பினும், தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கேட்ட அதிர்ச்சியில் அவர் உயிரிழந்து விட்டார்’’ என்றார்.

இதுகுறித்து லாலுவின் மகன் தேஜஸ்வி கூறுகையில், ‘‘அத்தை இறந்த தகவலை ராஞ்சி சிறையில் உள்ள தந்தையிடம் தெரிவித்து பரோலில் வெளியே வர சிறை அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து வருகிறோம். ஞாயிறு வார விடுமுறை தினம் என்பதால் பரோலுக்கு உடனடியாக விண்ணப்பிக்க இயலவில்லை. திங்கள் அன்று பரோல் பெற முயற்சிப்போம்’’ என்றார்.

கங்கோத்ரி தேவியின் உடல் இறுதிச் சடங்குக்காக அவரது சொந்த கிராமத்துக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. பரோல் கிடைத்ததும் இதில் லாலு பிரசாத் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending