கொரோனா உயிரிழப்புகளுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

Published:

Supreme Court1

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதற்கான தொகை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை 6 வாரங்களுக்குள் அரசு இறுதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா, கொரோனா தாக்கத்தால் ஏற்படும் கொரோனாவுக்கு பிந்தைய பிரச்னைகளால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவது அவசியம் என்று கருத்து தெரிவித்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, நிவாரணம் தொடர்பான விதிகளை வகுப்பது தங்களது அதிகாரத்துக்கு உடபட்டதல்ல என்று, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்த பதிலை நீதிபதிகள் ஏற்கவில்லை. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ,கருணைத்தொகை உள்ளிட்ட குறைந்தபட்ச நிவாரணத்தை வழங்குவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பு என்று வலியுறுத்தினர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

மேலும் நிவாரணம் என்பது சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று; அது விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது அல்ல என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த விவகாரத்தில், எவ்வளவு நிவாரணம் வழங்கலாம், அதற்கான நடைமுறைகள் என்ன என்பதை 6 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

குறிப்பாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம், நாள் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த விவரங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவற்றை ஆய்வு செய்து மாற்றுவதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related articles

Recent articles

spot_img