புனித நகரங்கள் மதுரா- பிருந்தாவனம் பகுதியில் மது, இறைச்சி விற்க உ.பி. அரசு தடை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
yogi at madura janmashtami festival
yogi at madura janmashtami festival

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா – பிருந்தாவனம் மாநகராட்சிப் பகுதியைச் சுற்றி 10 கி.மீ., தொலைவுக்கு மது, இறைச்சி முதலியன விற்பனை செய்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…

கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா – பிருந்தாவனத்தின் புனிதத்தைக் கருதி அப்பகுதியைச் சுற்றிலும் 10 கி.மீ. தொலைவுக்கு இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று, மதுரா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மது, இறைச்சி வியாபாரிகளுக்கு வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது… என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

முன்னதாக, கிருஷ்ண ஜயந்தி விழா அண்மையில் கொண்டாடப் பட்ட போது, மதுராவுக்குச் சென்று கிருஷ்ண ஜன்ம பூமியில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் வழிபாடு நடத்தினார். அப்போது அவர், மதுராவில் மது, இறைச்சி விற்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

உத்தரப் பிரதேசமாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மதுரா – பிருந்தாவனம் பகுதி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்மபூமியாக போற்றப் படுகிறது. முன்னர் தனித் தனி மாநகராட்சிகளாக இருந்த மதுராவும் பிருந்தாவனமும் மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரா – பிருந்தாவன் என ஒரே மாநகராட்சியாக 2017ல் இணைக்கப்பட்டது. இந்த மாநகராட்சிப் பகுதியில் தான் தற்போது மது இறைச்சிக்கு தடை விதித்து, நகரின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.