பாராளுமன்ற வளாகத்தில் இரவிலும் எம்பிக்கள் போராட்டம்…

Published:

pti07 27 2022 000220a070417 - 2026
500x300 1736878 mps protest - 2026

பாராளுமன்ற வளாகத்தில் தரையில் அமர்ந்து 50 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் எம்.பி.க்கள். ஈடுபட்டு வரும் நிலையில் புதன் கிழமை இரவு முழுவதும் எம்பிக்கள் போராட்டத்தை தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அக்னிபாத் திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது குறித்து விவாதிக்க கோரியும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலங்களவையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) சார்பில் 3 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 20 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பாராளுமன்ற வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.  சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை முன்பு தரையில் அமர்ந்து நேற்று பகலில் இருந்து  50 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் எம்.பி.க்கள். ஈடுபட்டனர். இரவு முழுவதும் 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு ஜிஎஸ்டி வரி ஆகியவை பொதுமக்களை பாதிப்பதாகவும், எம்.பி.க்கள் மேற்கொண்டுள்ள அமைதியான சத்தியாகிரகம் வெற்றி பெறும், என திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img