ஸ்ரீதேவி: நான்கில் இருந்து ஐம்பது நான்கு வரை!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ள இந்தியர்களின் மத்தியில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக துபைக்குச் சென்றிருந்தவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவி, தென் தமிழகத்தின் சிவகாசியில் 1963 ஆக.13 ஆம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரமாகப் பேர் பெற்றவர். நான்கு வயதில் நடிக்கத் துவங்கினார். எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் துணைவன் என்ற பக்திக் காவியத்தில் முருகப் பெருமானாக சிறு குழந்தை வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்தவர், பின்னர் ஜூலி என்ற ஹிந்திப் படத்தில் 1975ல் அறிமுகமானார்.

sridevi1 - 2026

13 வயதில் கதாநாயகியாக அறிமுகமான பெருமை ஸ்ரீதேவிக்கு உண்டு. 1976ல் சிறுமியாக இருந்தபோதே, மூன்று முடிச்சு என்ற படத்தில் தமிழில் கே.பாலசந்தரால் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தாலும், அவரது பெயர் சொல்லும் விதமாக அப்போதே அமைந்தது, பதினாறு வயதினிலே திரைப்படம். ஆனால் படம் வெளி வந்த போது, 14 வயதே ஆன ஸ்ரீதேவி, அந்தப் படத்தில் தூள் கிளப்பியிருந்தார்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அவர் நடித்த படங்கள் ஹிட் ஆயின. 1978ல் சிகப்பு ரோஜாக்கள், 1980ல் வறுமையின் நிறம் சிகப்பு, 1981ல் மீண்டும் கோகிலா, தொடர்ந்து மூன்றாம் பிறை, குரு, கல்யாணராமன், ஆகிய படங்கள் அவருக்கு பெரும் புகழைத் தந்தன. குறிப்பாக, வாழ்வே மாயம் படத்தில் அவர் பெயரிலேயே அமைந்த தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா – பாடல் ஒலிக்காத பட்டி தொட்டிகளே இல்லை எனலாம்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

sridevi englishvinglish - 2026

ரஜினியுடன் நடித்த போக்கிரி ராஜா, ஜானி, ராணுவ வீரன், தர்மயுத்தம் ஆகிய படங்களில் நடித்து பெரும் பெயர் பெற்றார். அந்தக் கால கட்டத்தில், அவர் கடைசியாக தமிழில் நடித்த படமும் ரஜினியுடன் நடித்த நான் அடிமை இல்லை திரைப்படம்தான். அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் அது.

sridevi b - 2026

பின்னாளில் 83ம் வருடம் தொடங்கி 97ம் ஆண்டு வரை ஹிந்திப் படங்களில் கோலோச்சினார். தனது 50 வயதுகளைக் கடந்த அண்மைக் காலத்தில்கூட இங்கிலீஷ் விங்கிலீஷ், நடிகர் விஜய் உடனான புலி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.

இவரது நடிப்புத் திறமைக்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் நாட்டின் நான்காவது உயரியன் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

marriagephoto - 2026

இவர் மிதுன் சக்ரவர்த்தியை 85ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் 3 வருடங்களே வாழ்ந்தார். பின்னாளில் 96ல் போனி கபூருடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள்.

நான்கு வயதில் நடிக்கத் தொடங்கி, இந்திய சினிமாவின் லேடீ சூப்பர் ஸ்டார் என்ற பெருமை பெற்று, 54 வயது வரை திரையுலகில் கோலோச்சி, சுமார் 50 ஆண்டுகளை திரையுலகில் கடந்துள்ள ஸ்ரீதேவிக்கு திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் தங்களது நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.