uttaraghand tunnel work - 2026

நிறைவுக் கட்டத்தில்… உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்புப் பணி!

Featured இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
uttaraghand tunnel work - 2026
#image_title

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில், துளையிடும் இயந்திரத்தின் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து, இன்று மாலை மீட்புப் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னதாக, உத்தரகாசியில் சுரங்கப்பாதையைத் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தாமதம் அடைந்தன. இதுவரை 46.8 மீட்டர் தூரம் வரை சுரங்கப்பாதை துளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 மணி அளவில் துளையிடும் பணி துவங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மீதமுள்ள 5 முதல் 10 மீட்டர் துளையிடும் இடத்தில் எந்தவித தடைகளும் கிடையாது என்பதால் இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் நிறைவடைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு உயிர் கொடுத்த திருச்செங்கோடு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனத்தின் சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் துளையிடும் அதிநவீன ரிக் இயந்திரம் இதில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டது.

உத்தராகண்டில் உள்ள உத்தரகாசி – யமுனோத்ரியை இணைக்கும் விதமாக நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே நவ. 12ம் தேதி, மலையின் சுரங்கப்பாதையில், ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மறுமுனையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 பணியாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கை 11 நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் பணியாளர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்த, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடைச் சேர்ந்த ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனத்திடம் ‘சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் துளையிடும் அதிநவீன ரிக் வண்டி இருந்ததால், உதவி கோரப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் சிக்கிய இடத்துக்கு மேல் இருந்து துளையிட்டனர். இதில் மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக துளையிடப்பட்டது. அதன் வழியாக கேமராவை உள்ளே அனுப்பி தொழிலாளர்களை அவர்களின் குடும்பத்தினருடன் பேச வைக்கப்பட்டது. மேலும் 41 தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன் குடிநீர் உணவு மருந்துப் பொருட்களை இதன் மூலமாக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தரணி ஜியோடெக் நிறுவன மேலாண் இயக்குனர் ஜெயவேல் தெரிவித்தபோது, எங்களிடம் மூன்று துளையிடும் இயந்திரங்கள் இருந்தன. அதில் நவீன ரிக் இயந்திரமான ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ வாயிலாக துளையிடும் பணியில் ஈடுபட்டு சாதித்துள்ளோம். இந்த இயந்திரத்தை பி.ஆர்.டி. நிறுவனம் உருவாக்கியது” என்றார்.

இந்த இயந்திர உருவாக்கம் குறித்து தகவல் அளித்த பி.ஆர்.டி. நிறுவன மேலாண் இயக்குனர் பரந்தாமன், ”திருச்செங்கோடில் 1972ல் பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ ரிக் இயந்திரத்தை தயாரித்து கொடுத்தோம். இது தற்போது 41 தொழிலாளர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுத்தப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.