காவி பயங்கரவாதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை: மறுக்கும் சிவராஜ் பாடீல்

Published:

sivaraj patel - 2026

லாட்டூர்: 2007ம் வருட ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீல், தாம் ஒரு போதும் காவி பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தியதில்லை என்று மறுத்திருக்கிறார்.

ஊடகத்தினருடனான உரையாடலில், 73 வயதாகும் சிவராஜ் பாடீல், இந்தப் பிரச்னையில் குற்றச்சாட்டுப் பதிவில் காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதை நான் எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறேனா? இது ஒரு பயங்கரவாத வழக்கு. நீதிமன்ற குற்றச்சாட்டுப் பதிவில் இந்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததா? என்று கேள்வி எழுப்பினார் பாடீல். இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் நவ. 2008 வரை மத்தியில் ஆட்சி செய்த ஐ.மு.கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்.

முன்னர் காவி பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை வடிவமைத்தவர், அப்போது அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர். அவர்களுடன் மத்திய பிரதேச முதல்வராக இருந்த திக் விஜய் சிங், தன் பங்குக்கு அடிக்கடி அந்த வார்த்தைகளை ஊடகங்களில் சொல்லி வந்தார். எனவே இது குறித்து பாடீலிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், சம்பந்தப்பட்டவர்களிடமே இந்த வார்த்தைகள் குறித்து கேளுங்கள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார்.

முன்னதாக நம்பல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை- என்.ஐ.ஏ., நீதிமன்றம், 2007 மே 18ம் தேதிய குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அபினவ் பாரத் உறுப்பினரான நபகுமார் சர்க்கார் என்ற சுவாமி அசீமானந்தா, தேவேந்தர் குப்தா, லோகேஷ் சர்மா, பரத் மோகன்லால் ரதேஷ்வர் என்ற பரத் பாயி, ராஜேந்தர் சௌத்ரி ஆகியோரை, குற்றச்சாட்டுகள் எதுவும் போதுமானதாக இல்லை என்று கூறி விடுவித்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்தத் தீர்ப்பு வந்ததும், பாஜக., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, காங்கிரஸை குற்ற்றம் சாட்டினார். இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கில் காங்கிரஸார் தயார் செய்து பரப்பிய இந்து பயங்கரவாதம், காவி பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுலும், சோனியாவும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img