மோடியின் ஆட்சியின் கீழ், தேசிய புலனாய்வு முகமையின் நம்பகத் தன்மை எப்படிப்பட்டது என்று தெரிகிறது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அதே நேரம், இஸ்லாமியர்களின் வாக்குகளுக்காக, இந்துக்களை இழிவுபடுத்தி, அவதூறு கிளப்பி காங்கிரஸ் செய்த மதப் பிரிவினை அரசியல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளது பாஜக.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்த இஸ்லாமியரான குலாம் நபி ஆசாத் இது குறித்துக் கூறியபோது, பாஜக.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து 4 வருடங்களில் புலனாய்வு முகமையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்றார்.
2007ம் வருட ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீல், தாம் ஒரு போதும் காவி பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தியதில்லை என்று மறுத்திருக்கிறார்.
ஊடகத்தினருடனான உரையாடலில், 73 வயதாகும் சிவராஜ் பாடீல், இந்தப் பிரச்னையில் குற்றச்சாட்டுப் பதிவில் காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதை நான் எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறேனா? இது ஒரு பயங்கரவாத வழக்கு. நீதிமன்ற குற்றச்சாட்டுப் பதிவில் இந்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததா? என்று கேள்வி எழுப்பினார் பாடீல். இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் நவ. 2008 வரை மத்தியில் ஆட்சி செய்த ஐ.மு.கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்.
முன்னர் காவி பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை வடிவமைத்தவர், அப்போது அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர். அவர்களுடன் மத்திய பிரதேச முதல்வராக இருந்த திக் விஜய் சிங், தன் பங்குக்கு அடிக்கடி அந்த வார்த்தைகளை ஊடகங்களில் சொல்லி வந்தார். எனவே இது குறித்து பாடீலிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், சம்பந்தப்பட்டவர்களிடமே இந்த வார்த்தைகள் குறித்து கேளுங்கள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார்.
முன்னதாக நம்பல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை- என்.ஐ.ஏ., நீதிமன்றம், 2007 மே 18ம் தேதிய குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அபினவ் பாரத் உறுப்பினரான நபகுமார் சர்க்கார் என்ற சுவாமி அசீமானந்தா, தேவேந்தர் குப்தா, லோகேஷ் சர்மா, பரத் மோகன்லால் ரதேஷ்வர் என்ற பரத் பாயி, ராஜேந்தர் சௌத்ரி ஆகியோரை, குற்றச்சாட்டுகள் எதுவும் போதுமானதாக இல்லை என்று கூறி விடுவித்தது.
இந்தத் தீர்ப்பு வந்ததும், பாஜக., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, காங்கிரஸை குற்ற்றம் சாட்டினார். இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கில் காங்கிரஸார் தயார் செய்து பரப்பிய இந்து பயங்கரவாதம், காவி பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுலும், சோனியாவும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மத ரீதியாக மக்களை எப்படி பலிகடா ஆக்குவது என்பதை படித்து வைத்திருக்கிறார்கள் என்றவர், வரும் கர்நாடகா தேர்தலில் மக்கள் காங்கிரஸுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்; 2014 மக்களவைத் தேர்தலில் 44 இடங்களாக அவர்களின் பலம் மக்களவையில் குறைந்தது போல் இப்போது ஒரு பாடம் புகட்டுவார்கள் என்றார்.
புலனாய்வு முகமையை குற்றம்சாட்டுவது, காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக்குகிறது. 2ஜி வழக்கில் காங்கிரஸ் பெருந்தலைகளும், சில தொழிலதிபர்களும் விடுவிக்கப் பட்ட போது, அதனை வரவேற்ற காங்கிரஸார், இப்போது வேறு விதமாக குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.
இந்து பயங்கரவாதம் நாட்டுக்கு ஆபத்தானது என்று கூறி அவதூறு பிரசாரம் செய்துவந்த ராகுல் காந்தி, இந்த நாட்டின் பெரும்பான்மை மதத்தினரை இழிவுபடுத்தியதற்காக இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்று, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் பத்ரா.
முன்னாள் உள்துறை அதிகாரி ஆர்.வி.எஸ். மணி, ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொற்றொடரை வலியப் புகுத்தி, அதை நிலை நிறுத்துவதற்காக ஐ.மு.கூட்டணி அரசில் சில கோப்புகள் வலியத் தயாரிக்கப் பட்டன என்று பகிரங்கமாகக் கூறியதை நினைவுகூர்ந்த பத்ரா, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரிவினை அரசியல் பேசுவதை வெளிப்படையாக விமர்சித்தார். சித்தராமையா அண்மையில் தேசிய புலனாய்வு முகமை ஒரு வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பை விசாரித்த போது, அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த சித்தராமையாவும் காங்கிரஸ் தலைவர்களின் வழியில் தாஜா செய்யும் அரசியலையே செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.