பிரிட்டிஷாரை எதிர்த்து நோபல் பரிசை திருப்பி அனுப்பியவர் தாகூர்: சர்ச்சை ஏற்படுத்திய திரிபுரா முதல்வர் பிப்லப்!

Published:

biplab deb tripura cm - 2026

அகர்தலா: பிரிட்டிஷாருக்கு எதிராக நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தவர் தாகூர் என்று பேசி, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து, தான் பெற்ற நோபல் பரிசையே ரபீந்திரநாத் தாகூர் திருப்பிக் கொடுத்தார் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் பேசியுள்ள வீடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய 46 வயதான பிப்லப் குமார் தேவ், தாகூர் நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார் என்று பேசியுள்ளார். இப்படிப் பேசி, மீண்டும் ஒரு சர்ச்சை வளையத்துக்குள் சிக்கியுள்ளார் பிப்லப் குமார்.

நைட்ஹுட் என்பது ஒரு பட்டம். பிரிட்டிஷ் அரசர், அல்லது ராணியால் கொடுக்கப் படும் இந்தப் பட்டம், பிரிட்டன் நாட்டில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டம். இந்தப் பட்டம் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னர் மிஸ்டர் என்று போட்டுக் கொள்வதற்கு பதில், சர் என்று போட்டுக் கொள்ளலாம்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருந்ததால், தாகூருக்கு இந்த விருதை அளிக்க முன்வந்தது பிரிட்டிஷ் அரசு.

திரிபுரா முதல்வராக ஜிம் மாஸ்டராக இருந்த பிப்லப் குமார் தேவ், பதவி ஏற்றதில் இருந்தே, அவரைச் சுற்றி சர்ச்சைகள் அதிகம் வலம் வருகின்றனர். கால் நூற்றாண்டு கால கம்யூனிஸ அரசை அகற்ற பெரிதும் களத்தில் இறங்கி வேலை செய்த பிப்லப் குமார் தேவ், தற்போது முதல்வராகியுள்ளதால், அவரது கருத்துகள் அதிகம் ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் படுகின்றன. இந்த சர்ச்சைகளால், இப்போது தேசிய அளவில் புகழ் பெற்று வருகிறார் பிப்லப் குமார் தேவ்.

முன்னர், மகாபாரத காலத்திலேயே இணையம் இருந்தது என்று கூறி ஒரு சர்ச்சையில் சிக்கினார். பின்னர், 1997ல் சர்வதேச அழகிப் போட்டியில் வென்ற டயானா ஹைடன், நம் ஐஸ்வர்யா ராய் போன்று ஒன்றும் அழகானவர் இல்லை என்று குறிப்பிட்டார். மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு சரிபட்டு வரமாட்டார்கள் என்றார்.பின்னர் இளைஞர்கள் பீடா கடை போட்டாவது பிழைத்துக் கொள்ளலாமே தவிர, அரசியல்வாதிகளின் பின்னால் அலையாதீர்கள் என்று பேசினார். அவரது பேச்சும் கருத்தும் தேசிய அளவில் இப்போது கவனிக்கப் படும் வகையில் மாறி விட்டது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்நிலையில், ரபிந்திரநாத் தாகூர் குறித்த அவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கீதாஞ்சலி கவிதை தொகுப்புக்காக தாகூர் 1913ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். தாகூர் தனது நோபல் பரிசை திருப்பிக் கொடுக்கவில்லை. ஆனால், 1915ல் பிரிட்டிஷ் அரசு தாகூருக்கு வழங்கிய ‘சர்’ பட்டத்தை அவர் திருப்பி அனுப்பினார். 1919ல் ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய படுகொலைகளை அடுத்து, பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் வகையில் தனது சர் பட்டத்தை துறந்தார் தாகூர்.

இந்தப் பின்னணியில் பிப்லப் தேவ் பேச்சை இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பிப்லப் தேவ் மேடையில் பேசுவதற்கு முன், வீட்டில் ‘ஹோம் வொர்க்’ செய்து பழக வேண்டும் என்று கிண்டல் அடித்துள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img