கர்நாடக மக்களுக்கு அல்ல; காங்கிரஸுக்கே கடன் பட்டுள்ளேன்: குமாரசாமி திட்டவட்ட பேச்சு!

Published:

rahul kumarasamy - 2026

நான் கர்நாடக மக்களுக்கு கடன்படவில்லை, காங்கிரஸுக்கே கடன்பட்டுள்ளேன் என்று தெளிவுபடக் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. இதன் மூலம், அனுதாப அரசியலை முன்னெடுத்து நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கர்நாடகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கி, காங்கிரஸ் தோல்வி அடைந்து, தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்ற நிலை தெரியவரும் போதே… அதுவரை எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸும் மஜத.,வும் கூட்டணிக்கான ஏற்பாட்டை மேற்கொண்டன. இதில் முதலில் களம் இறங்கியது, காங்கிரஸ் கட்சிதான். மானம் மரியாதை எதுவும் அரசியலில் கிடையாது என்ற அரசியல் அரிச்சுவடியை மீண்டும் மெய்ப்பித்த காங்கிரஸ், மஜத.,வின் குமாரசாமி, முதல்வர் கனவில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, குதிரை பேரத்தில் அல்ல, குதிரை லாய பேரத்திலேயே இறங்கிவிட்டது.

குமாரசாமி முதல்வர் என்ற பொம்மையாக, முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டாலும், ஆட்டி வைத்து ஆட்சி செய்யப் போவது என்னவோ காங்கிரஸ் கட்சிதான். ஆனால், அதற்குத்தான் எத்தனை எத்தனை நாடகங்கள்?!

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து விவசாயிகள் கடனை ரத்து செய்வதுதான் என்று சொல்லி வந்த குமாரசாமி, ஆட்சிக்கு வந்ததும், அப்படி கையெழுத்திடுவது தன் கையில் இல்லை என்றும், காங்கிரஸின் கைகளில் உள்ளதாகவும், தாம் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருந்தால், அவ்வாறு கையெழுத்திட்டிருப்பேன் என்றும் சால்ஜாப்பு சொல்கிறார். இப்படியே சமாதானம் சொல்லிக் கொண்டு, காலத்தைப் போக்கிவிடுவார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

இப்போது, தேர்தலுக்கு பின்பான காங்கிரஸ்- மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்து, மாநில முதல்வராக மஜத., தலைவர் குமாரசாமி பதவி வகிக்கிறார். அமைச்சரவை அமைப்பதில் தொடர் சிக்கல்கள் நீடித்து வருவதால் இந்த இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டுள்ளதாக குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மையுடன் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மக்களிடத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவ்வாறு ஆட்சி அமைக்கும் பலம் என்னிடம் இல்லை. இங்கு நான் 6 கோடி கர்நாடக மக்களின் ஆதரவால் ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தயவு காரணமாகவே கர்நாடக முதல்வராகியுள்ளேன். ஆகவே, நான் கர்நாடக மக்களுக்கு கடன்பட்டவனில்லை, காங்கிரஸ் கட்சிக்கே கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஒரு முதல்வராக எனது பணியை நான் செய்ய வேண்டும். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும். இருப்பினும், நான் காங்கிரஸ் கட்சிக்கு கடன் பட்டுள்ளதால், அக்கட்சியின் தலைவர்களிடம் அனைத்து விவகாரங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி, தனக்கான அனுதாப அலையை ஏற்படுத்த முயற்சிகளைச் செய்யத்தொடங்கியுள்ளார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

விவசாயிகள் கடனாகட்டும், மாநிலத்தின் எந்த வளர்ச்சிப் பணிகளாகட்டும் எதுவாக இருந்தாலும், அது நடக்கவில்லையானால் அதற்கு காங்கிரஸே பொறுப்பு என்ற ரீதியில் அரசியலைச் செய்யத் துவங்கியுள்ள குமாரசாமி, காங்கிரஸுக்கு கர்நாடகத்தில் முடிவுரை எழுதி வருகிறார் என்பது மட்டும் நிதர்சனம்.

பொதுவாகவே ஒரு அரசியல் கண்ணோட்டத்தை நம் நாட்டில் சொல்லி வருகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி வைத்து செயல்படும் மாநிலக் கட்சிகளால், காங்கிரஸ் கட்சிதான் தேய்ந்து வந்துள்ள வரலாறு இங்கே எழுதப் பட்டிருக்கிறது. அதே நேரம், பாஜக.,வுடன் கூட்டணி வைத்து செயல்படும் மாநிலக் கட்சிகள், கரைந்து போய் விடுகின்றன. பாஜக.,வே அங்கெல்லாம் தனித்து ஆட்சி அமைத்து விடுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தொடங்கி, ஆந்திரத்தில் நாயுடு வரை அதை உணர்ந்துதான், பாஜக.,வை ஒதுக்கி வைத்து அரசியல் செய்யப் பார்த்து வருகிறார்கள். அந்தப் போக்கைத்தான் இப்போது கர்நாடகம் எதிரொலிக்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img