சவால்களை முறியடித்து பொருளாதார வளர்ச்சியை இரண்டு இலக்க விகிதத்தில் எட்ட நடவடிக்கை : மோடி உறுதி!

Published:

niti ayog modi - 2026

புது தில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்க விகிதத்தில் எட்டச் செய்வதே நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால் என்று கூறிய பிரதமர் மோடி, அதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிடி ஆயோக் கூட்டத்தில் பேசினார். மேலும், பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் நிதி உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பு ஏற்ற பின்னர், அது நாள் வரை இருந்து வந்த மத்திய திட்டக்குழுவைக் கலைத்தார். அதற்கு பதிலாக, ‘நிடி ஆயோக்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் துணைத் தலைவராக ராஜீவ் குமாரும் செயல்படுகின்றனர்.

நிடி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு 4 ஆவது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் சிலர், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பார்வையை முன்வைத்தார்.

 

அப்போது அவர், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18ம் நிதி ஆண்டின் கடைசி காலிறுதி வரை 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்து வருகிறது. இப்போது நாட்டின் முன் இருக்கும் மிகப் பெரும் சவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதுதான். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

புதிய இந்தியா எனும் இலக்கை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிடி ஆயோக்கின் நிர்வாகக் குழு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று பேசினார் மோடி.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறிய பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு இதனால் கிடைக்கும். முத்ரா திட்டம், ஜன் தன் யோஜனா, ஸ்டான்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் மிகப் பெரிய அளவுக்கு நிதி உள்ளீடுகளைக் கொண்டுவரும். சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இந்தத் திட்டங்கள் போக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களானாலும் மாநில அரசுகளின் செயல்பாடுதான் இதனை முழுமையாக மக்களிடம் பயனுள்ளதாக்கும் என்று கோடிட்டுக் காட்டினார்.

கொள்கைகளை வகுப்பது, துணைக் குழுக்கள் உருவாக்குவது, ஸ்வச் பாரத் இயக்கம், டிஜிட்டல் பரிமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டு செல்ல மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார் மோடி. மேலும், மாநிலங்களுக்கு நிதி வழங்குவது அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு வரை ரூ.6 லட்சம் கோடி என்ற நிலையில் இருந்து தற்போது மாநிலங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி தரப்படுவதாகக் கூறினார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, சமூக மாற்றத்துக்கான மாவட்டங்களின் வளர்ச்சி, ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்த்ரதனுஷ், ஊட்டச்சத்து இயக்கம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img