வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

modi edappadi - 2026புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல், மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு, தமிழக வளர்ச்சித் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு என பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமருடனான சந்திப்பில் ஆலோசிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கூறியவை..

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினேன். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி அளிக்க வேண்டும் என கோரினேன்.

அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமரிடம் தெரிவித்தேன்.

எம்ஜிஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது பெயரை, சென்னை சென்டரல் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

edappadi in delhi - 2026

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய நிதி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு, சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு இவை குறித்து கோரிக்கை விடுத்தேன்.

ஜிஎஸ்டி., வரி ஒதுக்கீடு, புயல் காலத்தில் மீனவர்களை மீட்க கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்கும் வகையிலான கடற்படைத் தளம் அமைக்க வேண்டும்… ஆகிய கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்தேன்.

தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள நிதி ஆதாரங்கள் தேவை. எனவே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

வெறும் புகார்களுக்காக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முடியாது. அப்படி செய்வதாக இருந்தால், இந்தியாவில் யாருமே பதவியில் இருக்க முடியாது.

தினகரனை சந்தித்தது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்; நாங்கள் அல்ல!
– என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.