சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர்

மும்பை,

நாட்டில் கட்டுங்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கும் மக்கள்தொகை வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான மக்கள்தொகைக் கொள்கையை வகுக்க வேண்டும்; சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டது…

மக்கள்தொகை கட்டுக்குள் இருந்தால்தான் அனைத்து வழிகளிலும் நாட்டின் வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சிக்கான இலக்கை எட்ட முடிகிறது என்றால், மக்கள்தொகையை அவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் காரணம். எனவே, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான மக்கள்தொகைக் கொள்கை கட்டாயமாக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் சமூக நல்லிணக்கம் ஏற்படுவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படும்.

நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளைக் கடந்து விட்டது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சிறுபான்மையினர் என்று வகைப்படுத்துவதா, வேண்டாமா என்பதை வரையறை செய்வதற்கான தருணம் நெருங்கியுள்ளது. ஏராளமான கிராமங்கள், வட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் குறிப்பிட்ட ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இருப்பினும், சிறுபான்மையினர் என்ற சலுகைகளைப் பெறுகின்றனர். எனவே, சிறுபான்மையினர் என்றால் என்ன? என்பதற்கான வரையறையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார் அவர்.