உச்ச நீதிமன்றத்தில் பொய் சொன்ன கேரள அரசு மீது வழக்கு!: சபரிமலை கர்ம சமிதி

இந்தியா சற்றுமுன்
sabarimala - 2026

சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு பொய் சொல்லியிருக்கிறது என்றும், அதற்காக கேரள அரசு மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் சபரிமலை கர்ம சமிதி கூறியுள்ளது.

சபரிமலைக்கு முறைகேடான வழிகளில் சென்று வந்த கம்யூனிஸ இயக்கப் பின்னணி கொண்ட கனகதுர்கா, பிந்து என இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின் போது, கேரள அரசு சபரிமலையில் இதுவரை 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாகக் கூறி, தரிசனம் செய்த பெண்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண்கள் அடங்கிய பட்டியலையும் அளித்தது.

மேலும் அந்தப் பட்டியலில், 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 21 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், வெறும் 3 பேர்தான் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கர்நாடகா, புதுச்சேரியை மற்றும் கோவாவிலிருந்து தலா ஒருவரும் என 51 பேர் சென்றதாக ஒரு பட்டியலை அளித்தது. ஆனால் இந்தப் பட்டியல் போலி என உடனேயே தகவல்கள் வெளியாயின.

கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் ஆதார் எண்கள் போலி என தெரிய வந்தது. புதுச்சேரியைச் சேர்ந்த ஷங்கர் என்ற ஓட்டுநரின் ஆதார் எண் கலாவதி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் ஆதார் எண், கலா என்ற பெயரில் இருந்தது. 47 வயதான பரஞ்ஜோதி என்பவர் 16 பேர் கொண்ட ஆண்கள் குழுவில் சென்றுள்ளார். ஆனால் ஆன்லைன் பதிவின் போது அவரது பாலினம் பெண் என பதிவு செய்துள்ளனர்.

இப்படி உச்ச நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து மக்களை தவறாக வழிநடத்துவதுடன், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை கேரள கம்யூனிஸ அரசு காயப்படுத்தியுள்ளதாகக் கூறி, இதற்காக கேரள அரசு மீது வழக்கு தொடர உள்ளதாக சபரிமலை கர்ம சமிதி கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.