முடங்கிய ஜெட் ஏர்வேஸ் சேவை விரைவில் மீளும்! வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை!

Published:

jet airways 3 - 2026

பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டு விரைவில் மீண்டும் விமான சேவை தொடங்கும் என வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, வங்கிகள் அவசர நிதியுதவி வழங்க மறுத்ததால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை  ஏப்.17ஆம் தேதியுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிறுவனம் 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார்.

இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து 75 சதவீத பங்குகளை விற்க வங்கிகள் கூட்டமைப்பு முயற்சி செய்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனால் இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய முடியவில்லை.

இந்நிலையில் குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள் பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால் 2018 டிசம்பரில் 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாகப் குறைந்து விட்டது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உடனடியாக ரூ.400 கோடி நிதியுதவி அளித்தால் சேவையை தொடரலாம் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால் மேற்கொண்டு நிதியுதவி அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன.

இதனால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், வங்கிகள் கூட்டமைப்பு விமான சேவை விரைவில் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜெட் ஏர்வேஸில் பதிவு செய்திருந்த சர்வதேச பயணிகளுக்கு ஏர் இந்தியா சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

பாரிஸ், லண்டன் ஹீத்ரூ, சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், அபுதாபி, ஜெட்டா, டாம்மம், மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கான குறைக்கப்பட்ட சிறப்பு பயணக் கட்டணத்தை ஜெட் ஏர்வேஸில் பதிவு செய்திருந்த பயணிகள் 9W என்ற சிறப்பு குறியீட்டுடன் சலுகையாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img