எனக்கு முன்பே செயலில் இறங்கிவிட்டார் மோடி: ராஜ்நாத் சிங்

இந்தியா

புதுதில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் குறித்த செய்தி எனக்கும் முன்பே அவருக்குக் கிடைத்து செயலில் இறங்கிவிட்டார் மோடி என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்க விரைந்து செயல்பட்டார் மோடி என்றும் அவர் கூறியுள்ளார். நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனைத்துவிதமான உதவிகளும் இந்தியத் தரப்பில் இருந்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார். மேலும் நமக்கும் நேபாளத்துக்கு நெருக்கமான கலாசாரத் தொடர்புள்ளது. நமக்கு நெருங்கிய நட்பு நாடு. நேபாளத்தில் நில நடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் நேபாள மக்களோடு இந்தியா துணை நிற்கும். இயற்கை சீற்றம் ஏற்பட்டவுடன், பிரதமர் மோடி உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இவர் சொல்லித்தான் எனக்கு நில நடுக்கம் குறித்தே தெரிய வந்தது. இந்தியாவில் இது வரை 72 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் வரை காயமுற்றுள்ளனர். நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.