புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியில் சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. நேபாளத்தில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகிலான நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் நிலநடுத்தால் 72 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் தன் பங்குக்கு, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார். நிலநடுக்கத்தால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் மற்றும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே வடக்கு மாநிலங்களில் பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் நஷ்டத்துக்கு விவசாயிகளுக்கு உதவ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளப் பணத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

