ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திடீர் தில்லி பயணம்! என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்!?

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

governor banwarilal purohit - 2026

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சி கூடாரத்தில் ஒற்றைத் தலைமை என்று ஒருபுறமும், கட்சி தாவத் தயாரென ஒரு தரப்புமாக  பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை திடீரென தில்லிக்கு பயணமானார்.  தில்லியில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக அரசியலில் வட்டாரம் பரபரப்பு அடைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றும், சட்டமன்ற இடைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி பெற முடியாததால், திமுக., வட்டாரம் சோர்வு அடைந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய திமுக., தலைமைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனிடையே, தங்களுக்கு மாநிலத்தை ஆட்சி செய்யும் அனுமதியையும் உரிமையையும் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி வருகிறது அதிமுக,! எனவே  திமுக., ஆட்சிக் கலைப்பில் ஈடுபட்டால், அது மக்கள் தீர்ப்புக்கு விரோதமானது என்று கூறி வருகிறது.

அதே நேரம், அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க திமுக., பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் ஆளும் அரசுக்கு ஆபத்து என்று கூற பட்டது.

தேர்தலில் தோற்கடிக்க முடியாமல் மக்கள் தீர்ப்புக்கு விரோதமாக,  குறுக்கு வழியில், புறவாசல் வழியாக, இருக்கும் இரு வருடங்களுக்குள் ஆட்சியைப் பிடித்து, எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடுவது என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காரணம், அடுத்து வரும் 2021 தேர்தலின் போது இதே அரசியல் சூழல் இருக்குமா என்பது கேள்விக் குறி என்கிறார்கள். ரஜினி, கமல் என்று சினிமாத்தன அரசியல் மீண்டும் களம் இறங்கிவிட்டால், தங்களுக்கான வாய்ப்பு போய்விடும் என்றும், திமுக., அதிமுக., எனும் இரு திராவிடக் கட்சிகளின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் மக்கள், மூன்றாவதாக ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலம் வந்துவிடும் என்பதால், அதற்கு முன் விழித்துக் கொள்ள மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார்.

அதே நேரம் அதிமுக.,விலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள் இரண்டாம் மட்டத் தலைவர்கள். அதில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற போர்க்கொடி ஒன்று. அடுத்து, பாஜக., கூட்டணியால்தான் அதிமுக.,வுக்கு தோல்வி என்ற கருத்து அமைச்சர்களாலேயே பேசப் படுவது.

அதே நேரம், அதிமுக., மீது அதிருப்தி இருப்பதால்தான், கூட்டணியே ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது என்று பாஜக.,வில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலர் கூறுவதுமாக தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வு கூட்டணிப் பிளவு நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  இது போன்ற காரணங்களால், பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழக ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவிருப்பது பல அனுமானங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.