சந்திரபாபுவின் ‘ஹெரிடேஜ்’ நெய்யால் துலாபாரம்! திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஜெகன் உறவினர் பதவிஏற்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ap thulaparam - 2026

ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஹெரிடேஜ் நிறுவனத்தின் நெய்யால் திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக  பதவி ஏற்றுக் கொண்ட தற்போதைய முதல்வர் ஜெகன் மோகனின் உறவினர் சுப்பா ரெட்டி துலாபாரம் நடத்தினார்! இது சமூக வலைத்தளங்களில் பெரும் அமளிதுமளிப் பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மன்மோகன் சிங் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதை அடுத்து, திருப்பதி தேவஸ்தான தலைவராக சனிக்கிழமை நேற்று சுப்பா ரெட்டி பதவியேற்றார். திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் பிற உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

நியமன பதவியான திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்டதாகும். மிகவும் செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்குகிறது. இந்தப் பொறுப்புக்கு தனது சித்தப்பாவான சுப்பா ரெட்டியை ஜெகன் மோகன் நியமித்துள்ளார்.

இதை அடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஒய் வி சுப்பாரெட்டி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதன் பின்னர் அவர் ஹெரிடேஜ் நெய்யால் துலாபாரம் ஏறினார்.

ஒய் எஸ் ஆர் கட்சியின் மூத்த தலைவர் ஒய் வி சுப்பாரெட்டி நடந்தே திருமலை சென்றடைந்தார். பின் முடி இறக்கிக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார். திருப்பதிப் பெருமாளை தரிசனம் செய்தபின்னர், கருடாழ்வார் சந்நிதியில் டிடிடி சேர்மனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்த தராசில் ஹெரிடேஜ் நெய்யால் துலாபாரம் செய்து கொண்டார். அந்த ஒளிப் படங்கள் ஊடகங்களில் வைரலானது.

ஹெரிடேஜ் நிறுவனம், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மருமகள் நடத்துவது. இந்த நிர்வாகத்தின் நெய்யை துலாபாரத்துக்கு உபயோகித்ததை பலரும் கிண்டல் கேலி செய்து வருகின்றனர். ஹெரிடேஜ் நெய் தரம் உயர்ந்தது என்பதால் தான் நாயுடு ஆட்சி  போன பிறகும் அதனை பயன்படுத்துகிறார்கள் என்று தெலுங்குதேசம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒய்எஸ்ஆர் கட்சியினர் அதற்கு பதில் அளிக்கும் வகையில், திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஹெரிடேஜ் நெய் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் உள்ளதால் அவ்வாறு செய்துள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். துலாபாரம் துவங்கியதே சர்ச்சையில் என்பதால் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகமும் வருங்காலங்களில் சர்ச்சைகளுடனும் பரபரப்புகளுடனும் இருக்கும் என்று கேலி செய்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.