பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?: முதல்வர் கையில் முடிவு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
lockdown chennai
lockdown chennai

பொது முடக்கம் நீட்டிக்கப் படுமா என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது முதல்வர் எடப்பாடியின் கையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், பொது முடக்கத்தை நீட்டிக்க தாங்கள் பரிந்துரைக்க வில்லை என்று தமிழக முதல்வரை சந்தித்த பின் மருத்துவக் குழு செய்தியாளர்களிடம் கூறியது.

இன்று காலை முதல்வரைச் சந்தித்த பின்னர், மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து, தங்களது சந்திப்பு குறித்து விளக்கினர். அப்போது, சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என்று கூறிய அக்குழுவினர், ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல: அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.. என்றனர்.

மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது… என்று தெரிவித்தனர்.

மேலும், திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது… என்று குறிப்பிட்டனர்.

காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம்… என்று குறிப்பிட்ட அவர்கள், சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது என்றனர்.

மேலும், எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்றும், பொதுமுடக்கம் நோய் தொற்று இரட்டிப்பாகும் காலத்தை அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அவர்கள், தங்களது கருத்தாக, கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை தீவிரமாக்கலாம் என்று தெரிவித்தனர்.

பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தாங்கள் பரிந்துரைத்துள்ளதாக, மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.