தாடி வளர்க்கும் பேஷன் காரணமாக, இவற்றை பராமரிக்கும் பொருட்கள் விற்பனை சந்தையில் வர்த்தகம் ரூ100 கோடியை எட்டியது. தாடி வளர்ப்பதே சோகத்தால்தான் என்ற நிலை மாறி, சில ஆண்டுகளாக தாடி வளர்ப்பது பெரும் பேஷனாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலர் தாடி வைத்துள்ளனர். இதை பார்த்து ஈர்க்கப்பட்ட ஆண்கள் பலர் தாடி வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தாடி வளர்க்கும் டிரண்ட் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது.
இதை கண்டுகொண்ட சில நிறுவனங்கள், தாடியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பரங்கள் செய்து ஊக்குவித்து வருகின்றன. தற்போது தாடி வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் என என பிரத்யேகமாக ஆயில், கிரீம்கள் மட்டுமின்றி, அவற்றை பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்க மெழுகு வகைகளும் விற்பனைக்கு வந்து விட்டன. இதுபோல், தாடியை சுத்தப்படுத்த ஷாம்பு, மணக்க வாசனை எண்ணெய்களும் கூட விற்கப்படுகின்றன. இதுகுறித்து தாடி வளர்ப்பதற்கான பொருட்களை தயாரிக்கும் சில நிறுவனங்கள் கூறியதாவது; கடந்த 90களில் மழமழவென மழித்துக்கொள்வது பேஷனாக இருந்தது. தற்போது தாடி வளர்ப்பது பேஷனாகி வருகிறது. இதற்கான பிரத்யேக பொருட்கள் சார்ந்த வர்த்தகம் தற்போது 100 கோடி ரூபாயை எட்டி விட்டது.
கடந்த 5 ஆண்டுகளில், தாடி வளர்ப்பது உள்ளிட்ட ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் வர்த்தகம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரக பகுதிகளிலும் இந்த பேஷன் பரவிவருகிறது. இந்த சந்தை வர்த்தகம் ரூ 5,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.



