லஞ்சம்: பி.எப் அமலாக்கப்பிரிவு பெண் அதிகாரி கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vasantha - 2026

திருப்பூரில், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, மோசடிக்கு உதவிய, பி.எப்., அமலாக்கப் பிரிவு பெண் அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட – பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. இங்கு, லஞ்சப் பணம் கைமாறுவதாக வந்த தகவல் அடிப்படையில், சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.

அமலாக்கப் பிரிவு அதிகாரி லோகநாயகி, 41, அறையில் இருந்து வெளியேறிய இருவரை பிடித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை செய்ததில், லோகநாயகிக்கு, 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியதை ஒப்புக் கொண்டனர்.

சி.பி.ஐ., அதிகாரிகள், லோகநாயகி அறையில் உள்ள மேஜையில் இருந்து, 4 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
தொடர்ந்து, அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் அறைகளிலும் சோதனை நடத்தினர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு, கோவை, திருப்பூர் பகுதிகளில் இயங்கும் ஒரு நிறுவனம், தொழிலாளர்களின் பி.எப்., தொகையை முறையாக செலுத்தவில்லை. பல லட்சம் ரூபாய் பி.எப்., நிலுவைத் தொகையை செலுத்தாமல் தவிர்க்க, பெண் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியது விசாரணையில் தெரிந்தது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

லஞ்சம் வாங்கிய லோகநாயகி மற்றும் லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ், ரமேஷ்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் உள்ள லோகநாயகி வீடு மற்றும் தனியார் நிறுவனத்தின் கோவை, திருப்பூர், சென்னையில் உள்ள கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத, 6.10 லட்சம் ரூபாய் மற்றும் பி.எப்., அலுவலக விதிமீறலுக்காக தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள் சிக்கின.

இது தொடர்பான சோதனையில், மற்றொரு அதிகாரி அறையில் இருந்து, 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த அதிரடியால், பி.எப்., அலுவலக அதிகாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.